அனுபவமே நல்ல ஆசான்!.

அனுபவமே நல்ல ஆசான்!.

இக்காலத்திற்கு படிப்பறிவை விட பட்டறிவே அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. பட்டறிவால் பாதித்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் தங்களைத் திருத்திக் கொள்கிறார்கள்.சிலர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் தாங்கள் கற்ற நன்மைகளையும், தீமைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க தவறுவதால் அனுபவமற்றவர்கள் தவறுகளை செய்கிறார்கள்.
3 - degree
அனுபவமே நல்ல ஆசான். நாளுக்கு நாள், நாம் வளர வளர நாம் பெறும் அனுபவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை இயற்கையாகவே நாம் பல பாடங்களைக் கற்கிறோம்.அந்தப் பாடங்களைக் கற்கும்போது நாம் தவறு செய்தால், அந்தப் பாடம் நமக்கு மீண்டும் போதிக்கப்படுகிறது. மனித உடலில் 60 டிரில்லியன் திசுக்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு திசுவும் நம் உடம்பு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும், பல திசுக்கள் மடிந்து பல புதிய திசுக்கள் தோன்றுகின்றன.

ஒரு திசு மறையும்போது, அந்த திசு அந்த உடம்பு குறித்த தனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் புதிதாக தோன்றும் திசுவுக்கு பரிமாற்றம் செய்து விட்டுதான் மறைகிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித உடம்பு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நம் உடம்பின் அதே நிலை இப்போது இல்லை. நம் உடம்பு ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்கிறது. இதே நிலைதான் நம் மனதிற்கும்.

வாழ்க்கை நாளும் நமக்கு பல பாடங்களைப் போதிக்கிறது. ஆனால், நாம் அப்போதைக்கு அதை உணர்ந்து மனதில் உறுதி எடுத்துக் கொண்டாலும், பின்னாளில் மறந்து விடுகிறோம். அனுபவத்தின் மூலம் பெறும் அறிவு, என்றும் நம் நினைவை விட்டு அகலாது. அனுபவ அறிவைப் பெற்றவர்கள் எந்த கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள கூடியவர்களாகவும் விளங்குவார்கள். எனவே, நமது அனுபவத்தையும், நாம் செய்த செயலின் மூலம் அடைந்த சாதக, பாதகங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நெருப்பு சுடும் என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாலும், அந்தக் குழந்தை அதீத ஆவலின் காரணமாக நெருப்பில் கையை வைத்தாலோ, உஷ்ணம் அக்குழந்தையின் மீது பட்டாலோ அல்லது அதனால் காயம் ஏதும் ஏற்பட்டாலோ அது அந்த நெருப்பின் தன்மையை உணர்ந்து, நெருப்பைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கிறது. இன்று பல தகவல்களை புத்தக அறிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் அது அனுபவ அறிவுக்கு ஈடாகாது.

தாஜ்மஹாலின் பிரமாண்டத்தை வெறும் படத்தை மட்டுமே பார்த்து உணர்ந்து கொள்ள முடியாது. அங்கு நேரில் சென்று உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் அருமையும் பெருமையும் தெரியும்.

மக்களிடையே, எதிலும் அவசரம் என்கிற போக்கு அதிகரித்து வரும் நிலையில் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றவர்கள் அதை பிறருக்கு போதிப்பதில்லை. இதனால், போட்டி, பொறாமை, வன்மம் முதலியவைகள் அதிகரித்து வருகின்றன. தான், தனது, தம் மக்கள், தமது குடும்பம், தம் சமூகம் என்ற மனப்போக்கு வளர்ந்தால் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கு மறைந்து விட்டது. ஒரு தவறை ஒருவன் செய்து அதனால் அவனது நற்பெயருக்கு களங்கம் வந்தால் அந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று அவன் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால், அதே தவறை மற்றவரும் செய்து துன்பப்படுவார்.

சுயஅனுபவம் நம் மனதில் நீங்கா நினைவாக அமைந்து விடுகிறது. அனுபவம் என்பது நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதாவது ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது நாம் உதவி செய்து அவர் வாழ்க்கையில் உயர்ந்தால் அது நல்ல அனுபவம். நாம் நம் பணத்தை ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த நிறுவனம் திவாலானால் அது கெட்ட அனுபவம். அந்தக் கெட்ட அனுபவத்தை, மற்றவர்களுக்கு போதித்து, நாம் செய்த தவறை அவர்களும் செய்யாமல் இருக்க உதவ வேண்டும். பிறரது ஆலோசனைப்படியும், புத்தகப் படிப்பின் மூலமும் அனுபவத்தை பெற முடியாது.

துன்பம் ஏற்படும்போதுதான் அதை எதிர்கொள்ளும் தைரியமும் உருவாகிறது. ஏற்கெனவே அனுபவம் பெற்றவர்கள் அதன் நன்மைகளையும், தீமைகளையும் பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். வாழ்க்கை என்பது மிகவும் சுருக்கமானது. அதில் கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் கனவு இறுதியில் மரணம்.

இந்தக் கொஞ்ச காலத்தில் நமது அனுபவத்தின் மூலமே எல்லாவற்றையும் உணர்ந்து திருத்திக் கொள்வதை விட, பிறரது அனுபவங்களின் மூலமே பல உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். பிறரது அனுபவம் நமக்கு அறிவாகட்டும்; நமது அனுபவம் பிறருக்கு அறிவாகட்டும்.

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

Related Posts

error: Content is protected !!