அதிமுகவில் ஒற்றை தலைமை சாத்தியமா?

அதிமுகவில் ஒற்றை தலைமை சாத்தியமா?

திமுகவுக்கு தேவை ஒற்றை தலைமை.. அதுவும் கெத்தான தலைமை. தொண்டர்கள் பலம் மட்டுமே வேண்டும் என்று அழுத்தமாக நம்பும் தலைமை. மாற்றுக் கட்சி இடம் மண்டியிட்டு அடமானம் போகாத தலைமை. திமுகவுக்கு எதிரான அரசியல் சிந்தனை கொண்ட தலைமை.இதையெல்லாம் விட்டுவிட்டு தன் ஜாதிக்காரன் பின்னால் இருக்கிறான் என்ற நினைப்பு மேலோங்கி நின்றால், அப்படி நினைப்பவருக்குத்தான் நாசம்.

கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் இறக்கும் முன் ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டும் என்று கை காட்டவில்லை. ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார் என்று எம்ஜிஆர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். அதேபோல இரண்டாகப் பிரிந்த கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து கைப்பற்றிய ஜெயலலிதாவும் தனக்குப் பின்னால் இவர்தான் என்று யாரையும் சுட்டிக் காட்டவில்லை.

அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கும்போது பின்னாளில் கலைஞரின் மகன் என்பவர் பிறந்து திமுக சார்பில் முதலமைச்சர் ஆவார் என்று நினைத்து பார்த்து இருப்பாரா என்ன? இல்லை நெடுஞ்செழியன்தான் கலைஞர் தான், எம்ஜிஆர் தான் தன் அரசியல் வாரிசு என்ற அண்ணா சொல்லிவிட்டுப்போனாரா?

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளின் தலைமை பீடத்தை பிடித்தவர்கள் அவரவர் உழைப்பாலும் தன்னை நிறுத்திக் கொள்ள நடத்திய போராட்டங்களும் சாதித்துக் கொண்டனர். சாதிக்க முடியாதவர்கள் அரசியலில் கரைந்து போனார்கள் உடன் பிறவா தோழி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலாவை ஜெயலலிதா கடைசி வரை பொதுவெளியில் பேசக்கூட விடவில்லை. ஓ.பன்னீர் செல்வம் எல்லாம் தற்காலிக ஏற்பாடுதான்.

எம்ஜிஆரும் சரி ஜெயலலிதாவும் சரி தனக்கு இணையான தலைவர் என்று கட்சியில் யாரையுமே கருதவில்லை. இருவருமே தங்களது ரத்த உறவுகளை அரசியலில் அனுமதிக்கவில்லை. ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சொந்தப் பிள்ளைகள் அமைந்திருந்தால் அரசியலில் அனுமதிக்காமல் இருந்திருப்பார்களா என்பது வேறு விஷயம்.

இரட்டை இலையை உயிர் மூச்சாக நினைக்கும் தொண்டர்கள் தான் அதிமுகவின் பலம். நிர்வாகிகளை தாண்டி தலைமையை மட்டும் நேரடியாக மதிப்பவர்கள். இத்தகைய மதிப்பைப் பெறும் அளவுக்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கண்டவர் ஜெயலலிதா.

ஆதாயத்திற்காக கட்சி மாறும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அடிப்படையில் பலமான வித்தியாசம் உண்டு. தங்கள் கட்சி தான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி என்றும் நீண்ட காலமாக ஆண்ட பெருமை கொண்ட கட்சி என்றும் மார்தட்டிக் கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்கள், தங்களுக்கு தலைமை தாங்குபவர் இன்னொரு கட்சிக்கு அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.தொண்டர்களின் ஆதரவு என்ற ஒரே பலத்தை தாண்டி, சாதி, இத்தனை நிர்வாகிகள், பெரிய இடத்தில் உள்ள இவர் நமக்கு உதவுவார் என, மற்ற விஷயங்களை எல்லாம் கணக்கில் கொண்டு செயல்படும் எவருமே அதிமுகவில் ஒற்றை தலைமையாக வலுவுடன் உருவெடுத்துவிடமுடியாது.

பெருவெடிப்பு நிகழாமல் வெளியே வரவும் முடியாது.

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!