September 20, 2021

ஹெல்மெட் எனப்படும் தலைகவசத்தின் ஸ்தல வரலாறு!

தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவதை அரசு இப்போது கட்டாயமாக்கி விட்டது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். விசாரணையின் முடிவில், ”ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
helmet 1
இந்த ஹெல்மெட்ட் எனப்படும் தலைக்கவசங்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் 1880 களில் தலைக் காயமே பெரும்பாலான சைக்கிள் விபத்துகளினால் உயிரிழக்கச் செய்கிறது என்று சொல்லி தலைக்கு ஏதாவது கவசம் போல போட ஆரம்பித்தார்கள். 1953ம் ஆண்டு தென் கலிபோர்ணியாவிலுள்ள பேராசிரியர் லோம்பர்ட் என்பவர் தலைக்கவசத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். இதுவே நவீன கால தலைக்கவசங்களுக்கெல்லாம் முன்னோடி என நம்பப்படுகிறது.

1970 களின் துவக்கத்தில் தலையைச் சுற்றி பெல்ட் போன்ற இழைகளால் ஆன தலைக்கவசம் விற்பனைக்கு வந்தது. இது பெரும்பாலும் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்பவர்களின் காது தரையில் உரசாமலிருக்கவே உருவானதாம். அதன் தொடர்ச்சியாக வந்தவையே நவீன கால தலைக்கவசங்கள்.

மேலை நாடுகளில் போக்குவரத்துத் துறை மற்றும் ஸ்னெல் என பல தர அங்கீகாரங்கள் தலைக்கவசங்களின் தரத்தை பரிசோதிக்கின்றன. இதில் ஸ்னெல் சோதனையில் 500 கிலோ மீட்டர் வேகத்தில் தலைக்கவசத்தைத் தாக்கியும், கனமான எடையை அதன் மீது போட்டும், ஒரே நேரத்தில் தலைக்கவசத்தை ஏழெட்டு முறை தாக்கியும், ஒரே இடத்தில் பலமுறை தாக்கியும் சோதனைகள் மேற்கொள்கிறார்கள்.

இருசக்கர வாகனங்களில் செல்வது குறைந்த பாதுகாப்பான பயணம் என்பது நாம் அறிந்ததே. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இருசக்கர வாகன விபத்துகள் மற்ற வாகன விபத்துகளை விட 44 மடங்கு அதிகமாகும். தலைக்கவசங்கள் விபத்தினால் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களிலிருந்து காப்பாற்றுகிறது என்பது இன்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலைக் கவசம் அணிவதனால் இருசக்கர வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 88 விழுக்காடு தவிர்க்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.

தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதால் விபத்துகளினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவுக்குக் குறைந்துவிடுகிறது. மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கின்றன.தலைக்கவசம் அணிவதனால் கழுத்துப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்னும் வாதத்தை அமெரிக்காவில் கோல்ட்ஸ்டெயின் ஆய்வு பொய் என நிரூபித்திருக்கிறது.

தலைக்கவசம் ஒருவகையில் தலைப் பாதுகாப்புக்கு இருப்பது போல சாலைச் சத்தங்களிலிருந்து கொஞ்சம் காதுக்கும் மனதுக்கும் ஓய்வையும் கொடுக்கிறது என்பது தலைக்கவசப் பயன்பாட்டாளர்களின் கருத்து. இது கவனத்தைச் சாலையில் செலுத்தி வாகனம் ஓட்டுவதற்கு வழிசெய்யும். குளிரிலிருந்து தப்பிக்கவும், தூசிலிருந்து தப்பிக்கவும், பூச்சிகள் போன்றவை கண்களையும், காதுகளையும் தாக்காமல் காக்கவும் கூட தலைக்கவசங்கள் பயன்படுகின்றன என்பன தலைக்கவசங்களின் சிறப்புப் பலன்கள் எனலாம்.
helmet-1
ஃபைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி ஸ்டெபிலைசர் போன்றவற்றின் உதவியுடன் தயாராக்கப் படுகிறது தலைக்கவசம். கண்ணாடி நார் பூச்சு, அதன்மேல் ஒட்டிக் கொள்ளும் பைண்டர் ரெசின் என ஒன்றன் மீது ஒன்றாக இவை பல அடுக்குகளாக சேரும்போது தலைக்கவசம் தயாராகிறது.

ரெசினில் நல்ல தரமான ரெசினை உபயோகப்படுத்தினால் மட்டுமே தலைக்கவசம் தரமானதாய் இருக்கும். அதே போல கண்ணாடி இழைகளிலும் சி, இ என பல வகை இழைகள் உள்ளன. தரமான இழைகளினால் தயாராக்கப்படாத ஹெல்மெட் பார்வைக்கு தலைக்கவசம் போல் இருக்குமே தவிர பாதுகாப்புக்குப் பயன்படாது என்கிறார்கள்.

ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டதும் நாளை முதல் சாலை ஓரங்களிலும், மர நிழல்களிலும், சந்துகளிலும் எங்கும் ஹெல்மெட் கடைகள். தலைக்கவசங்கள் வெறும் இருநூறு முந்நூறு ரூபாய்க்கே கிடைக்கும் என்பது ஆருடத் தகவல். இவை நிச்சயம் போலியானவையே. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தரமான தலைக்கவசங்களை விற்கின்றன. போலிகள் அந்த பெயரில் கூட விற்பனையாகும் எனவே அவர்களுடைய நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவது பலனளிக்கும்.

தரமான தலைக்கவசம் ஆயிரம் ரூபாய் ஆகலாம். மிகவும் குறைந்த விலையிலுள்ள தலைக்கவசங்கள் நிச்சயம் தரமற்றவையே. எடைக்கும், ஹெல்மெட் பாதுகாப்புக்கும் சம்பந்தம் கிடையாது. எடை எண்ணூறு கிராமுக்கும் இரண்டு கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமான தலைக்கவசங்கள்.ஹெல்மெட்டுக்குள் உள்ளே உள்ள துணியை விலக்கிப் பார்த்து கரடுமுரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். அது போலியான தலைக்கவசம்.