October 27, 2021

ஹெச்எஸ்பிசி,- இந்தியாவின் தனியார் வங்கிச் சேவை ஷட் டவுண்! – ஏன்?

இந்தியாவில் 18–ம் நூற்றாண்டிலேயே வங்கிச் சேவைகள் துவங்கி சுதந்திரம் பெற்ற நேரத்தில் மிக பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. 1935–ல் ரிசர்வ் வங்கி ஏற்படுத்தப்பட்டு அனைத்து வங்கிச் சேவைகளையும் கண் காணித்தும் வருகிறது. பொதுமக்களின் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொகை பெருவாரியாக வங்கி களில் இருந்ததால் தனியார் வசம் இருந்த வங்கிச் சேவைகளை நாட்டுமையாக்க ஜூலை 19, 1969–ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் முற்போக்கான திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.மொத்தத்தில் 85 சதவிகித பொதுமக்களின் வைப்பு நிதிகளை கொண்டு இயங்கும் வங்கிகள் மக்கள் நலன் காக்க உதவ வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தேசிய மயமாக்கல் முடிவு எடுக்கப்பட்டது.
hsbc bank
வங்கிகள் தனியார் வசம் இருந்தால் பொதுமக்களின் பணம் நிதி உதவியாக ஒரு சிலரை மட்டுமே சென்றடைய முடியும் என்பதை உணர்ந்து தான் இந்திரா காந்தி அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார்.ஆனால் வங்கித் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒரு சில அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாறும் என்று எதிர் பார்த்து இருக்கமாட்டார்.இந்தியன் வங்கி கடன் மேல் கடன் கொடுத்து திவாலாகியது! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யும் கடன் மேல் கடன் கொடுத்து வராக்கடன் சுமையில் தலை நிமிர்ந்து நடைபோட முடியாமல் மூழ்கிக் கொண்டி ருக்கிறது.இந்த இரு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் தான் இருக்கிறது. அவை இரண்டுமே யார் கட்டுப்பாட்டில் இயங்கும் போது இப்படி கடனை வாரி வாரி வழங்கும் கர்ணனாக மாறியது என்பது உலகிற்கே தெரிந்த சிதம்பர ரகசியமாகும்.

ஆனாலும் பொதுத்துறை வங்கிகளில் 80 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகையாக உள்ளது. உலகத்தில் வேறு எங்கும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இவ்வளவு தொகை கிடையாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த பெரும் நிதி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வெற்றிகரமாக செயல்படும் பொதுத்துறை வங்கிகளை இழுத்து மூடும் நடவடிக்கையாக தனியார் நிறுவனங்கள் புதிதாக வங்கி தொடங்க, இதுவரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதி வழங்கி வந்த நடைமுறையை மாற்றி, இனி எப்போது கேட்டாலும் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு ‘வங்கி சீர்திருத்தச் சட்டம் 2012’ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு, புதிய வங்கி தொடங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மேலும் சென்னையை சேர்ந்த இக்விடாஸ் ஹோல்டிங் மற்றும் இ.ஏ.எஸ்.எப். மைக்ரோ பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்மென்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பத்து தனியார் நிறுவனங்கள் சிறு வங்கி தொடங்குவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. 100 கோடி ரூபாய் முதலீட்டில் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க வகை செய்யும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண மக்கள் வங்கிக்குச் சென்று கடன் பெறுவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் கந்து வட்டி கொடுமையை அனுபவித்து வரும் நிலையில், அதனைப் போக்க இந்த தனியார் வங்கிகள் உதவும் என்றனர் பொருளாதார நிபுணர்கள்.

அதே சமயம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து தனியார் வங்கிச் சேவை பிரிவை இந்தியாவில் மூடுவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஹெச்எஸ்பிசியும் இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை தனியார் வங்கிச் சேவை பிரிவில் ஹெச்எஸ்பிசி மேற்கொண்டிருந்தது.

எங்களுடைய சர்வதேச யுத்திசார் ஆய்வின் படி இந்தியாவில் இந்த பிரிவை மூடுவதாக ஹெச்எஸ்பிசியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதில் 70 நபர்கள் பணிபுரிகிறார்கள். சாந்தனு அம்பேத்கார் இந்த பிரிவின் தலைவராக இருக்கிறார். இவர்கள் இனி சில்லரை வங்கிச் சேவை (ரீடெய்ல் பேங்கிங்) பிரிவுக்கு மாற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்த பிரிவின் பணியாளர்களுக்கு இமெயில் அனுப்பட்டுள்ளதாம்.வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்த பிரிவு மூடப்படும் என்று வங்கி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பிரிவின் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்எஸ்பிசி பிரீமியர் என்னும் சர்வதேச வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு மாறிக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுமாம்.

இதனிடையே இந்த ஹெச்எஸ்பிசி வங்கியில் 1,000 இந்தியர்கள் 400 கோடி டாலர் கருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதிற்கும். இப்பிரிவை மூடுவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று வங்கி தெரிவித்திருப்பது நோட் பண்ண வேண்டிய விஷயம்