October 16, 2021

ஹுட் ஹுட் புயலால் விசாகப் பட்டினம், ஒடிசா வில் பெரும் பாதிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே, நேற்று முற்பகல் 11 மணியளவில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. தொலைத்தொடர்பு இணைப்பு முற்றிலும் சீர்குலைந்தது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மொத்தத்தில் ஹூட் ஹூட் புயல், விசாகப்பட்டினத்தை தலைகீழாக புரட்டிப்போட்டது.
Hudhud-Cyclone-oct 13
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த, ‘ஹுட் ஹுட்’ புயல், நேற்று காலை, 11:03 மணிக்கு, ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் அருகே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 195 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஒடிசா மாநிலத்தையும் இந்த புயல் பதம் பார்த்தது. இரண்டு மாநிலங்களிலும் கோரத் தாண்டவம் ஆடிய இந்தப் புயலால் மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; ஐந்து பேர் உயிரிழந்தனர்.மழையின் வேகம் சற்று குறைந்த பின்னர் தீயணைப்பு படையினரும் மற்றும் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கடற்படை வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள், மின் கம்பங்களை அப்புறப்படுத்தினார்கள்.

புயல் கரையை கடந்த பின்னர் காற்றின் வேகம் சற்று குறைந்த போதிலும் மழை நீடித்தது. புயல் வடக்கு திசையில் நகர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தை நோக்கி சென்றது. இதனால் அந்த மாநிலத்திலும் மழை பெய்தது. நிலப்பகுதிக்குள் சென்று விட்டதால் புயல் படிப்படியாக வலுவிழந்து மழையும் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு அந்தமான் மற்றும் மியான்மர் கடல் பகுதியில், சமீபத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அடுத்த சில நாட்களில், இது, புயலாக மாறியது. பின், தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் கரையை நோக்கி நகர்ந்தது. ‘ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே, இந்த புயல் கரையைக் கடக்கலாம்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.இதையடுத்து, இரு மாநிலங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்ப ட்டிருந்தனர். முன் எச்சரிக்கையாக, எட்டு லட்சம் பேர், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.நேற்று காலை, 10:00 மணிக்கு, இந்த புயல், விசாகப்பட்டினத்துக்கு மிக அருகே நெருங்கியது. இதனால், அங்கு மிக பலத்த மழை பெய்தது; பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதைத் தொடர்ந்து, 11:03 மணிக்கு, விசாகப்பட்டினம் அருகே, ‘ஹுட் ஹுட்’ புயல், கரையைக் கடந்தது.