October 16, 2021

ஹுட்ஹுட்’ புயல்: ஒடிசா, ஆந்திராவுக்கு எச்சரிக்கை!

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘ஹுட்ஹுட்’ என பெயரிடப்பட்டுள்ளது.’ஹுட்ஹுட்’ புயல் அக்டோபர் 12-ம் தேதி ஆந்திரம் – ஒடிசா இடையே புயல் கரையை கடக்கும் எனறும் இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
cyclone-Hudhud-October-8-2014
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “ஹுட்ஹுட் புயல், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே விசாகப்பட்டினம், கோலாப்பூர் பகுதிகளில் அக்டோபர் 12-ம் தேதி கரையை கடக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாரதீப், கோலாப்பூர் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசாவில் கடந்த ஆண்டு பைலின் புயல் தாக்கியது. பைலின் புயலை சிறப்பாக எதிர்கொண்டதாக ஒடிசா அரசு பாராட்டுப் பெற்றது. இந்நிலையில், ‘ஹுட்ஹுட்’ புயலையும் எதிர்கொள்வது தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக்: “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.