October 21, 2021

ஹாங்காங் போராட்டம் முடிவுக்கு வந்தது!

ஹாங்காங்கில் தொடர்ந்து நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வருகிறது. ஹாங்காங் அரசு மற்றும் அந்நாட்டு மாணவர்கள் கூட்டமைப்புடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததால் ஹாங்காங் போராட்டம் முடிவு பெறுகிறது என அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் லாவ் காங்-வா தெரிவித்துள்ளார்.
Hong Kong
இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான ஹாங்காங்கின் நிர்வாகியை, அப்பகுதி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஹாங்காங் நிர்வாகிகள் தேர்தலை நடத்த முடியாது என்றும், சீனாவின் நேரடி நிர்வாகம் தொடங்கும் என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சீனா மசியவில்லை. ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், ‘ஹாங்காங் நிர்வாகிகள் தேர்தல் நடத்தலாம். ஆனால், தேர்தலில் சீன ஆதரவு நபர்களே போட்டியிடுவார்கள். மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிடும் நபர்களும் சீனாவின் கம்யூனிஸ்ட் பொதுக்குழுவில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்’ என்று சீனா கெடுபிடி விதித்தது. இதையடுத்து ஹாங்காங்கில் போராட்டம் தீவிரமானது. சீனாவின் நடவடிக்கையை எதிர்த்து பல ஆயிரத்துக்கும் அதிகமான ஹாங்காங் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே ஹாங்காங் அரசு மற்றும் அந்நாட்டு மாணவர்கள் கூட்டமைப்புடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததால் ஹாங்காங் போராட்டம் முடிவு பெறுகிறது.