January 26, 2022

ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டை விட்டு நான் விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாக்கிய அனைவருக்கும் என் நன்றிகள். என் இதயம் கனிந்த நன்றிகள் அனைவருக்கும்!” என்று பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்:

ஐபிஎல் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஹர்பஜன் சிங் ஆடியிருக்கிறார். இவர் தன் ஐபிஎல் தொடர் வாழ்க்கையின் இறுதி பகுதிகளிலேயே மெண்ட்டாராக பணியாற்றத் தொடங்கி விட்டார். வருண் சக்ரவர்த்தியை ஒரு அற்புதமான ஸ்பின்னராக்கியதில் ஹர்பஜனின் பங்கு மிக முக்கியமானது.

13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சராசரி 26, ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்து வீச்சு.ஹர்பஜன் சிங் தனது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில், மொத்தமாக 1200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச டி20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார்.

1998ம் ஆண்டு ஏப்ரலில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹர்பஜன் 2015-ல் தென் ஆப்பிரிக்காவுடன் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடினார். 1998ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் கிரிக்கெட்டைத் தொடங்கிய ஹர்பஜன் சிங், கடைசி டெஸ்ட் போட்டியை 2015-ல் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆடினார்.

இறுதியாக 2016-ல் யுஏஇ-க்கு எதிராக டாக்காவில் டி20 சர்வதேச போட்டியில் ஆடிய ஹர்பஜன் சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆர்சிபி அணியுடன் சென்னையில் ஏப்ரல் 2021-ல் ஆடியது குறிப்பிடத்தக்கது.