September 25, 2021

ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு! -தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 1869ம் ஆண்டு 8அடி ஆழத்துடன் அணை கட்டப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் வாய்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 560ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 145வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பராமரிப்பின்றி தூர்ந்துபோன அணையில் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி ஆண்டுக்கு சுமார் 15முதல் 25டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
srivaikundam dam
வீணாகும் தண்ணீரை சேமித்து விவசாயிகள், பொதுமக்களை பாதுகாத்திடும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.றும் மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணை ரூ.4.44 கோடி செலவில் தூர் வாரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் கடந்த 20.06.2014 அன்று அறிவித்தார். அவர், அறிவித்து 10மாதங்கள் கடந்தும் அணை தூர் வாரப்படவில்லை.

2015ம்ஆண்டின் மழைக்காலத்திற்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார உத்தரவிடக்கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஸ்ரீவைகுண்டம் அணை பராமரிப்பின்றி மணல் மேடாகிவிட்டது. இதனால் அணையில் தண்ணீரை தேக்க முடியாமல் ஆண்டுக்கு 15 முதல் 25 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அணையை தூர்வார ம.தி.மு.க. மற்றும் விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப கலெக்டர் 2014–ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டும், இன்னும் அதற்கான பணிகள் நடக்கவில்லை. எனவே அந்த அணையில் இந்த கோடை காலத்திலேயே தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஏ.ஆர்.யூசுப் ஆகியோர் முன்னிலையான விடுமுறை அமர்வில் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் இதற்கான அனுமதி கோரும் மாநில அரசின் மனு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,”ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது தொடர்பான உரிய உத்தரவை ஜூன் 10–ந்தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். அப்படி மத்திய அரசு உரிய உத்தரவு அனுப்பாத பட்சத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணிகளை மாநில அரசு மறுநாளே தாமதமின்றி உடனடியாக தொடங்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.