September 27, 2021

ஸ்டாலின் ரொம்ப நல்லவரு.. அவரை ஏன் வேதனைப் படுத்தறாங்க! – கருணாநிதி அப்செட்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நேற்று மதியம் உணவருந்த உட்கார்ந்தேன். கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சட்டப்பேரவைப் பணிகளை முடித்துவிட்டு என்னை சந்திக்க வந்தார். முகம் சரியாக இல்லை. சாப்பிட்டுக்கொண்டே விசாரித்தேன். ஆங்கில பத்திரிகை முதல் பக்கத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி பற்றி செய்தி வெளியிட்டது. அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க காத்திருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையில் உள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அது பற்றி கேட்டதால், அவர் தான் என்னை தலைவரிடம் கலந்தாலோசிக்குமாறு அனுப்பிவைத்தார் என்றார்.
karuna & stalin
உடனடியாக நான் தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அழைத்து, தலைமைக் கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடச்சொல்லிவிட்டு, படுக்கையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. மாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக செல்ல உத்தேசித்தபடி அங்கும் செல்லவில்லை. ஏன் மனம் சரியில்லை? அதற்கு என்ன காரணம்? நமக்கு எதிராக “துரும்பு” போன்ற செய்தி கிடைத்தாலும், அதை “தூண்” போல் பெரிதாக ஆக்கி நாளேடுகளில் செய்தி வெளியிடுகிறார்கள்.

தலைமைக் கழகத்திலே செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன். “தத்துவ மேதை” என்று எங்களால் பாராட்டப்பட்ட தஞ்சை டி.கே.சீனிவாசனின் மகன். நல்ல படிப்பாளி. ஆனால் பத்திரிகைச் செய்தி, பேட்டி என்றால் அவருக்கு ஒரு ஈடுபாடு. அதனால்தான் அவரது விருப்பம் போலவே, கடந்த முறை அமைப்புச்செயலாளராக இருந்தவரை, தலைமை கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் என்ற பதவியிலே நியமித்தோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு அல்லவா?.

அதை மீறக்கூடாது அல்லவா?. அது போலவேதான், “கருத்துக் கணிப்பு” என்ற பெயரிலே யாரோ சிலர் வெளியிடுகிறார்கள். அதனால் எந்த பயனும் விளைவதில்லை. அதை நான் நம்புவதுமில்லை. உண்மையில் அவர்களே மோதலை விலை கொடுத்து வாங்குவதைப்போல வெளியிடுகிறார்கள். உதாரணமாக கருத்துக் கணிப்பு எடுத்தவர்கள், முதல்-அமைச்சர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா?. தே.மு.தி.க.வுக்கு கிடைக்குமா? என்று கணக்கெடுத்து அறிவிப்பதுதான் முறை.

யார் முதல்-அமைச்சர் என்று, அ.தி.மு.க.விலே ஜெயலலிதா பெயரை வெளியிட்டுவிட்டு, தி.மு.க. என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, கருணாநிதிக்கு எத்தனை பேர் ஆதரவு? ஸ்டாலினுக்கு எத்தனை பேர் ஆதரவு? என்று அவர்களே ஒரே கட்சியிலே இரண்டு பெயரைக் குறிப்பிட்டு, எதற்காக பிரச்சினையை உண்டாக்குகின்ற வகையில் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்? அ.தி.மு.க.விலே ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு? ஓ.பன்னீர்செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு?. என்றா கேட்டிருக்கிறார்கள்? தி.மு.க.வில் மட்டும் இரண்டு பேரை குறிப்பிட்டு எதற்காக கணக்கெடுக்க வேண்டும்?.

தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களின் நோக்கமா?. அதுவும் தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த எதற்காக முனைகிறார்கள்?. தி.மு.க.விலே யார் முதல்-அமைச்சர் என்று நாங்களே கவலைப்படாத போது, கருத்துக்கணிப்பு எடுக்கின்றவர்களுக்கு ஏன் அக்கறை? ஸ்டாலினே பல முறை, கருணாநிதி தான் 6-வது முறையும் முதல்-அமைச்சராக வருவார் என்று பலமுறை சொன்ன பிறகும் வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை?.

அதனால் ஸ்டாலினுக்குத்தான் எப்படிப்பட்ட தர்ம சங்கடம்? அவர் தி.மு.க.வே என் மூச்சு என்று அல்லும், பகலும் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறார்கள்? அதிலும் சில பத்திரிகையாளர்கள் மேலும் மிகுந்த அக்கறையோடு, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள, என் மகன் மு.க.அழகிரி சென்னை வருகிற விமானம் எப்போது வருகிறது என்று தெரிந்து கொண்டு, விமான நிலையத்திற்கே சென்று இந்த கருத்துக்கணிப்பு பற்றி கேள்வி கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? அந்த பேட்டிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சில ஏடுகள் வெளியிடுகின்றன என்றால், அவர் மீது உள்ள அக்கறை காரணமாகவா? அவரும் தன் தம்பி மீதுள்ள கோபத்தின் காரணமாக, என்னை புகழ்ந்து கூற, அதனால் என்ன பயன்? எதிர்ப்பாளர்களுக்கு இடம் கொடுத்து விடுகிறது.

இருவருக்கும் இடையே புகுந்து, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுவோருக்கு இடம் கொடுத்ததாக ஆகி விடுகிறது. ஒருமுறை திருச்சியிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்திலே, அண்ணாவினுடைய மறைவிற்கு பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தந்தை பெரியார் பேசினார். அப்போது சொன்னார், ‘‘அண்ணாத்துரை சொன்னார் என்று கருணாநிதியும், அந்த கட்சியிலே உள்ளவர்களும் நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றையும் காப்பாற்ற வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார்கள்.

நான் கருணாநிதிக்கு மாத்திரம் அல்ல, கருணாநிதி தலைமையிலே இருக்கின்ற கட்சித்தொண்டர்களுக்கு எல்லாம், கட்சித் தோழர்களுக்கெல்லாம் சொல்வேன். நீங்கள் கடமையை மறந்தாலும் மறந்துவிடுங்கள், கண்ணியத்தை நீங்கள் போற்றாமல் விட்டாலும் விட்டுவிடுங்கள். ஆனால் கட்டுப்பாடு; அதை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று நான் கட்சித் தோழர்களுக்கு – தி.மு.க. நண்பர்களுக்கு சொல்வேன்” என்று பெரியார் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

அந்த வார்த்தையை இன்றளவும் கடைப்பிடிக்கின்ற காரணத்தினாலே தான் நம்முடைய கட்சியை யாரும் அசைக்க முடியவில்லை, வானுயர ஓங்கியிருக்கின்ற ஆலமரம் போல் தி.மு.க. இன்றைக்கு இருக்கின்றது. ஆனால் இதன் வளர்ச்சியைத் தடுக்க- இந்த ஆட்சியாளர்கள் எடுக்கின்ற முயற்சி போதாது என்று, அவர்களுக்கு அனுசரணையாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒருசில நாளேடுகள் எப்படியெப்படியோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

“பத்திரிகா தர்மம்” என்பதையே அடியோடு குழி தோண்டிப் புதைத்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் அப்படிப்பட்ட ஏடுகளுக்கு நாமே இரையாகி விடலாமா? இப்படியெல்லாம் செய்து தி.மு.க. செயல்வீரர்களின் கவனத்தைத் திருப்ப முயலுகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு தி.மு.க.வினர் இரையாக கூடாது, இரையாக வேண்டாம். “திராவிடம்” என்ற இனப்பெயரை காப்பாற்றவும் – “இன உணர்வை” பாதுகாக்கவும்-அதைப் பரப்பிட பாடுபட்டு வருபவர்களுமான நம்மை நாமே வறுத்திக்கொண்டாலும் பரவாயில்லை என்று இந்த ஒப்புயர்வற்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். இதை வீழ்த்திட, எதிரிகள் எத்தகைய சூழ்ச்சிகளைக் கையாண்டாலும், அந்த சூழ்ச்சிகள் அனைத்தும், “மலையில் மோதி வீழ்கிற சிற்றலைகள்” என்று கருதி நாம் நம்முடைய சுயமரியாதைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்; மேலும் தொடர்வோம்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.