September 25, 2021

ஷங்கரின் ‘ஐ’ படம் வருமா? வராதா?

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி, நடிகர் விக்ரம் நடித்த “ஐ’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.ஆனாலும் திட்டமிட்டப்படி ரீஸாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
I-Tamil-Movie-
இது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா லிமிட் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,”கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “ஐ’ படம் தயாரிக்க உள்ளதாக ஆஸ்கர் நிறுவனம் எங்களிடம் தெரிவித்தது.படத்தைத் தயாரிப்பதற்காக ரூ. 15 கோடியை கடனாக ஆஸ்கர் நிறுவனம் எங்களிடம் வாங்கியது. இந்தக் கடன் தொகைக்கு 6 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில், பணத்தை திருப்பித் தரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, வட்டியுடன் சேர்த்து ஏறத்தாழ ரூ. 17.5 கோடி தொகையை ஆஸ்கர் நிறுவனம் எங்களுக்கு கடனாகத் தர வேண்டும். இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகின்றன.ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய கடன் தொகையை ஆஸ்கர் நிறுவனம் இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே, ஐ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதுவரை இந்தியா, வெளிநாடுகளில் அந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஆஸ்கார் நிறுவனம் உள்பட நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதுவரை “ஐ’படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், சமரசம் மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யுமாறும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.இதையடுத்து படம் பொங்கல் சமயத்தில் வெளியாகாது என செய்திகள் பரவின. உடனே இது குறித்து ‘ஐ’ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாங்கள் நண்பர்களே. எங்களுக்குள்ளான இந்தப் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும். எனவே ‘ஐ’ சொன்ன தேதியில் வெளியாகும்” என்று கூறினார்.

ஆனாலும் இன்னமும் ஐ படத்திற்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் யூ சர்ட்டிபிகேட் ரீவைசிங் கமிட்டியிலிருந்து இன்னும் கிடைக்க வில்லை என்றும் மேலும் ஆந்திராவில் பொங்கலுக்கு ரிலீஸாவதில் கொஞ்சம் குழப்பம் இருப்பதாலும் ஆஸ்கார் நிறுவனமே இப்படியொரு வழக்கை போட வைத்துள்ளதாக ஷங்கர் தரப்பு தெரிவிக்கிறது.