September 18, 2021

வை கோ வெல்ல வேண்டும்! – ஏன்?

பாஜக கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு இவரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பார்கள் அல்லது பாஜக வை வெறுப்பவர்களாக இருப்பார்கள். இதே வைகோவை முன்பு திட்டிக்கொண்டு இருந்த பாஜக ஆதரவாளர்கள் தற்போது வைகோவை பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வைகோ தூய்மையானவர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் கூறவில்லை, அப்படி கூறவும் முடியாது. தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்திற்கு அழகிரியை திட்டி விட்டு அதே அழகிரியை அன்பு சகோதரர் என்று கூற வேண்டிய நிலை. இருப்பினும் இருக்கும் அரசியல்வாதிகளில் இவர் பரவாயில்லை என்பது தான் என் கருத்து. கோபமாகப் பேசி இருக்கலாம், கூட்டணி மாறி இருக்கலாம் என்று வைகோ மீது மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மற்ற அரசியல்வாதிகளை ஒப்பிடும் போது மக்களுக்காக போராடுபவர் என்பதில் சந்தேகமில்லை.
vaiko-
வைகோ விடம் உள்ள பெரிய பிரச்சனை “உணர்ச்சி வசப்படுதல்”. எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே பொங்கி விடுவார். எந்த ஒரு நபர் உணர்ச்சிவசப் படுகிறாரோ அவர் ஒரு சிறந்த தலைவராக வர முடியாது. எந்த ஒரு பிரச்சனையிலும் அதை பக்குவமாக கையாள வேண்டும். இது வைகோவிடம் இல்லை, இது தான் இவரிடம் உள்ள பிரச்சனை.

தமிழன் குறித்து எந்த மாநிலத்தில் பிரச்சனை என்றாலும் அது என்ன ஏது என்று கூட பார்க்காமல் உடனே தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஆவேசமாக முழங்க ஆரம்பித்து விடுவார். பிரச்னையைத் தீர்க்கத் தேவை விவேகம் தானே தவிர ஆவேசம் அல்ல. ஆவேசம் எக்காலத்திலும் பிரச்னையைத் தீர்க்க உதவாது.

எனக்கு கலைஞர் மீது பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஈழ விசயத்தில் இவர் நடந்து கொண்டதை இன்னும் மறக்கவில்லை என்றாலும் சில விசயங்களில் பொறுமையாக நடந்து இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. இரு மாநிலப் பிரச்சனைகளை பக்குவமாக கையாண்டு இருக்கிறார். சிங்கப்பூர் கலவரம் நடந்த போது தமிழக அரசியல் தலைவர்களில் பொறுப்பான அறிக்கை விட்டது கலைஞர் மட்டுமே! மற்ற தலைவர்கள், பாதிக்கப்பட்டது தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக என்ன நடந்தது என்று கூட தெரியாமல் கண்டபடி அறிக்கை விட்டார்கள். கலைஞரை பிடிக்காதவர்கள் உடனே இதை வைத்து கொடி பிடிக்காதீர்கள்.. இது கலைஞர் பற்றிய பதிவு இல்லை, இதை ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.

வைகோ, மக்கள் பிரச்சனை எது என்றாலும் குரல் கொடுப்பார். மீனவர், மீத்தேன், மது ஒழிப்பு, கெயில் நிறுவனம் குழாய் எரிவாயு, ஸ்டெர்லைட், ஈழம், விவசாயிகள் பிரச்சனை என்று எதாக இருந்தாலும் முழக்கமிடுவார். போராட்டங்களில் ஆவேசமாக நடந்து கொள்ளாமல் இதையே இன்னும் கொஞ்சம் முறையாக திட்டமிட்டு நடந்து கொண்டால், இவர் போராட்டம் பலரை சென்றடைந்து இருக்கும், இன்னும் மக்களின் ஆதரவு கிடைத்து இருக்கும் என்பது என் கருத்து. மதிமுக மக்களிடையே விரிவாக சென்று இருக்கும் ஆனால், இவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால், ஒரு சராசரி பொது ஜனம் “அட! இவர் இப்படித்தான் எப்பவுமே கத்திக்கொண்டு இருப்பார்.. வேறு வேலையே இல்லை” என்று அசால்ட்டாக கூறி இவரின் உழைப்பை just like that கடந்து விடுகிறார்கள்.

தற்போது, போராடுபவராக இருந்தால் மட்டும் போதாது (இருக்கும் அரசியல்வாதிகளில் இவர் ஓகே என்ற அடிப்படையில் இதைக் கூறுகிறேன்) தங்களுடைய உழைப்பை சரியான முறையில் மார்கெடிங் செய்யத் தெரிந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் என்ன தான் கஷ்டப்பட்டுக் கதறினாலும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடும். இதைத் தான் வைகோ செய்து கொண்டு இருக்கிறார். இத்தனை வருடங்களாக அரசியலில் இருந்தும் இன்னும் அவரால் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவரின் உணர்ச்சி வசப்படுதலும் அவருக்கு தன் உழைப்பை மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததும் தான் காரணம்.

நேற்று வந்த விஜயகாந்த் எல்லாம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்து பாஜக வை 14 தொகுதிகள் கேட்டு மிரட்டிக்கொண்டு இருக்கும் போது, இவர் அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். கூடுதல் தொகுதிகளையும் கேட்க முடியாத பரிதாப நிலையில் இருக்கிறார். உண்மையில் இவரால் கூடுதல் தொகுதிகள் கேட்க முடியாது. காரணம், அந்த அளவிற்கு மதிமுக பலமாக இல்லை, மக்களிடையே ஆதரவைப் பெறவில்லை. வைகோ அவர்கள் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தும் ஏன் இதை அடைய முடியவில்லை என்பதை யோசித்தாலே போதும் வெற்றிக்கான காரணத்தை அறிந்து கொள்வார்.

தமிழன் தமிழன் என்று எதற்கெடுத்தாலும் கொடிப் பிடித்து சராசரி அரசியல் தலைவரைப் போல உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி இதை எப்படி ஆக்கப் பூர்வமாகக் கையாண்டால் பிரச்னையை தீர்க்க முடியும்! மக்களின் ஆதரவைப் பெற முடியும்! என்பதை வைகோ யோசிக்க வேண்டும். இதை செய்ய அவர் தவறினால் முன்பே கூறியபடி “இவர் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கத்திட்டே / நடந்துட்டே இருப்பாரு” என்று மக்களின் கவனத்தைப் பெறத் தவறி விடுவார். எத்தனை நடைப் பயணம் சென்றாலும் எந்தப் பயனும் இல்லை.

இந்தத் தேர்தலில் என் பாஜக ஆதரவு நிலையை நான் ஏற்கனவே தெளிவாகக் கூறி இருக்கிறேன், காரணத்தையும் விளக்கி விட்டேன் ஆனால், இந்தப் பதிவு பாஜக கூட்டணியில் வைகோ இருப்பதால் எழுதப்பட்டதல்ல என்பதை நான் 100% உறுதியாகக் கூறுகிறேன். நான் பாஜக வை ஆதரிப்பதற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு இது வேறு.

மதிமுக தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் பெயரை “United states of India” என்று மாற்றுவோம்! என்று அறிவித்து இருப்பது, தற்போது தேவையற்றது. எதிர்காலத்தில் இது போல ஒரு நிலையை இந்தியா அடைய வாய்ப்பிருக்கிறது என்றாலும் தற்போதைய சூழலில் இது முற்றிலும் அவசியமற்ற அறிக்கை அதோடு தேவையற்ற விமர்சனங்களையும் கொண்டு வரும். நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கு, தற்போது பெயர் மாற்றுவது தான் முக்கியமா! ஏற்கனவே தமிழ்நாடு என்றால் நக்கல் அடிக்கும் வட இந்திய ஊடகங்கள் இதை பெரிது படுத்தி பேசி வருகின்றன.

நம் அனைவருக்கும் வைகோ மீது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் ஆனால், அதைக் காட்டும் நேரம் இதுவல்ல. நம் தமிழக அரசியல்வாதிகள் டெல்லியில் காமெடி நபர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பலருக்கு மொழிப் பிரச்சனை, இன்னும் சிலருக்கு தன் கருத்தை சரியாக முன்வைக்கத் தெரியாதது காரணம். நன்றாகப் பேசக் கூடியவர்கள் கட்சி லாபத்திற்காக அமைதியாக இருக்கிறார்கள். திருச்சி சிவா குறிப்பிடத்தக்க அளவில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். நம் சார்பாக வைகோ போன்றவர்கள் சென்றால், தமிழர் பிரச்சனைகளுக்கு அங்கு முக்கியத்துவம் கிடைக்கும், கவனிக்கப்படும். ஒருவேளை பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டி வந்தால், நம் தமிழகம் சார்பாக குரல் கொடுக்க வைகோ போன்றவர் நிச்சயம் வேண்டும்.

இது அனைத்தும் விருதுநகர் மக்கள் கையிலேயே உள்ளது. கடந்த முறை காங் நபருக்கு ஓட்டுப் போட்டு அவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள். அதோடு ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்ததாகவும் கூறப்பட்டது, 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டார். நடந்து முடிந்ததைப் பற்றி பேசிப் பயனில்லை. எனவே இந்த முறை விருதுநகர் மக்கள், வைகோ க்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும்.

தமிழக மக்களின் குரல் என்றால் சுப்பிரமணியம் சாமியையும் சோவின் குரலையும் மட்டும் வட இந்திய ஊடகங்கள் பதிவு செய்து பெரும்பான்மை தமிழக மக்களின் எண்ணமாக அவர்களைக் காட்டி நம் உண்மையான எண்ணங்களை வெளியே தெரியாமல் செய்து விடுகிறார்கள். இது மிகவும் மோசமான செயல். நம் குரல் மத்தியில் ஒலிக்க வைகோ போன்ற திறமையான பேச்சாளர்கள், கவன ஈர்ப்பு நபர்கள் நிச்சயம் தேவை.

வைகோ சென்றால் அனைத்தும் அப்படியே தலை கீழாக மாறி பாலும் தேனும் ஓடும் என்று கூறவில்லை, ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இவர் போன்றவர்கள் இருப்பது நல்லது.

பின்குறிப்பு: வைகோ அரசியலில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். பல மக்கள் போராட்டங்களை தைரியமாக முன்னின்று நடத்தியவர். அவருக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. வைகோ மீது வைத்துள்ள மதிப்பின் காரணமாகவே மேற்கூறியது கூறப்பட்டது.

நன்றி ::www.giriblog.com/