October 20, 2021

“வெள்ள நிவாரண நிதியில் விஜய் & அஜித் எதுவும் பங்களிக்கவில்லை”

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களை சந்தித்தனர்.
nadi dec 27
அப்போது நிருபர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் :

ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள எமி ஜாக்சனுக்கு அதுபற்றி சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியும். அதற்காக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது.‘பீப்’ பாடல் தொடர்பாக சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் எண்ணமில்லை. வெள்ள நிவாரணம் குறித்த கமல்ஹாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. நாங்கள் சங்க நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறோம். எங்களுக்கு முறையாக புகார்கள் கொடுத்தால் மட்டுமே, அது தொடர்பாக பேசி முடிவெடுப்போம்.

நடிகர் விஷால்

எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் என்று சரத்குமார் கூறியது முற்றிலும் தவறு. தற்போதுதான் எஸ்.பி.ஐ. சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒப்புக் கொண்டார்கள். விரைவில் ஒப்பந்தத்தை ரத்து செய்து, கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்குவோம். அனைத்து இளம் நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடித்து அதில் கிடைக்கும் வருமானம் மூலமாக கட்டிடத்தை கட்டுவோம்.

வெள்ள நிவாரண நிதியாக இதுவரை 1 கோடியே 3 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. அதை தமிழக அரசிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம். இந்த வெள்ள நிவாரண நிதியில் விஜய் மற்றும் அஜித் எதுவும் பங்களிக்கவில்லை. ராதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘பீப்’ பாடல் விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்று கேட்டுள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம்.

‘பீப்’ பாடல் தொடர்பாக சிம்புவிடம் நானும் கார்த்தியும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாசரும் பொன்வண்ணனும் டி.ஆரிடம் பேசினார்கள். அவர்கள் சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டார்கள். மேலும் தற்போது அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இனிமேல் நாங்கள் கருத்து கூற முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து சிம்பு விரைவில் மீண்டு வருவார் என்று நம்புகிறோம்.

நடிகர் கார்த்தி

நடிகர் சங்கத்தின் கணக்குகளை ஒப்படைத்து விட்டதாக சரத்குமார் கூறி வருகிறார். ஆனால், 2013-14, 2014-15 ஆண்டுகளுக்கான நடிகர் சங்க அறக்கட்டளை கணக்குகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இவற்றை ஒப்படைக்குமாறு சரத்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பழைய நிர்வாகிகள் அளித்த கணக்குகளை தற்போது அதிகாரிகள் ஆடிட்டிங் செய்து வருகிறார்கள். அது முடிந்த பிறகுதான் அந்த கணக்குகளில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது தெரியவரும்.-என்று தெரிவித்தனர்