February 8, 2023

வெற்று கோஷங்களும் வீண் ஜம்பங்களும் இந்திய மக்களை பாதுகாக்காது!

ந்திய ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் குறைந்து அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடரும் பட்சத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும்! சிறு, குறுந்தொழில்கள் செய்வோர், மாதந்திர சம்பளத்தை நம்பி இருப்போர் நிலைமை கவலைக்கிடமாகும்! நமக்கு வாய்த்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “இந்திய ரூபாய் வலுவிழக்கவில்லை, அமெரிக்க டாலர் வலுப்பெற்றுள்ளது அவ்வளவே ” என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இத்தகைய பதில்களை கண்டு நகைப்பதா அல்லது சினங்கொள்வதா என பொருளாதார வல்லுநர்களும் , விவரம் அறிந்தவர்களும் திகைத்து போயுள்ளனர்! இந்த அரசின் செயல்களை அல்லது செயலற்று கிடக்கும் மடமையை கண்டு விமர்சிக்க, கண்டிக்க வல்லுநர்கள் முன் வரவில்லை. காரணம், அதனால் எந்த பயனும் இல்லை என்ற நினைப்புதான். செவிடன் காதில் ஊதிய சங்காக நமது ஆலோசனைகள் போவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ்காரருமான ப. சிதம்பரம் அவர்கள்,’நமது பிரதமருக்கு எனது ஆலோசனை இதுதான். அவர் உடனடியாக Dr.சி.ரங்கராஜன் ,Dr.ஒய்.வி.ரெட்டி, Dr.ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியா ஆகியோரை அழைத்து அடுத்து இந்தியா செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி கலந்தாலோசிக்க வேண்டும், அக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரும் நிதி அமைச்சரும் அவசியம் பங்கு பெற வேண்டும் ‘ என்று ட்வீட் செய்துள்ளார் . விஸ்வ குருவுக்கே ஆலோசனையா? ஆலோசனை கேட்டால் அவர் எப்படி விஸ்வ குருவாக பக்தர்களிடம் காட்சியளிப்பார்? அவருக்கு தோன்றாத ஆலோசனைகளா இந்த படிப்பாளிகளுக்கு தெரியப்போகிறது? என ஆபத்துதவிகள் அலறுவது நமக்கு புரிகிறது, ஆனால் ப.சிதம்பரத்திற்கு ஏன் இது புரியவில்லை?

பாஜக அரசு நிர்மலா சீத்தாராமனை நிதி அமைச்சர் ஆக்கியதின் பலனை இந்திய மக்கள் இன்று அனுபவித்து கொண்டுள்ளனர், பக்த கோடிகள் பரவசமடைந்துள்ளனர், ப.சி. மட்டும் இன்னும் ஆலோசனைகளை ஏனோ அள்ளி வீசுகிறார்! உண்மையில் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நிலை கண்டு- இந்திய ரூபாய் மதிப்பிழந்து வருவதை கண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஏனெனில், விலைவாசி ஏற்றத்தால், பணவீக்கத்தால், பற்றாக்குறையால் எரிபொருள் விலை ஏற்றத்தால்..என தாங்க முடியாத பொருளாதார பற்றாக்குறையால் அனைத்து மக்களும் பாதிப்பு அடைகின்றனர். சிறு, குறுந்தொழில் செய்வோர் செய்வதறியாது திகைக்கின்றனர்!

தங்களது சேமிப்புகளையும், ஊதியங்களையும் விலையேற்றத்தால் இழந்து தவிக்கும் மக்கள் பணவீக்கத்தால் வாழ்வாதாரம் முழுமையும் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போவதை ஒரு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? எல்லாம் தானாக சரியாகி விடும் என்று ருத்திராட்ச பூனை போல் அரசு வாளாவிருக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு வலது சாரிகளின் – மார்கட் பொருளாதாரவாதிகளின்- பதில் “ஆம்” என்பதுதான் .

எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும் அரசின் வேலை அதுவல்ல என்பதே இவர்களின் தாரக மந்திரம். இதைதான் மினிமம் கவர்ன்மென்ட், மேக்சிமம் கவர்னன்ஸ் என்று வலது சாரிகள் குறிப்பிடுகின்றனர் . இதைத்தான் மோடியும் (தெரிந்தோ, தெரியாமலோ) கடைபிடிக்கிறார். ஆனால், அரசு தலையிட்டு இந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தாவிடில் இந்திய நாட்டின் கொடுக்கல் வாங்கல் சமநிலை -Balance of Payment- குலையும். இறக்குமதிக்கும் , அரசு செலவினங்களுக்கும் போதிய நிதி யோ அந்நிய செலவாணி கையிருப்போ இருக்காது!

இறக்குமதி விலை ஏற்றத்தால் (பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் இறக்குமதியின் விலை ஏற்றத்தால்) சாதாரண மக்களின் மீதான சுமை அதிகரிக்கும் , அந்நிய முதலீடு வற்றிப்போவதால் அரசு தனது செலவினங்களுக்கு நிதி திரட்ட இயலாமை ஏற்படும். இதனால் அரசு செலவினங்கள் குறையும் அதனால் மேலும் மக்கள் இன்னலுக்கு ஆளாவார்கள். தொழிலாளர்கள் துவண்டு போவார்கள்! இதனால் அரசு தலையிட்டு அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசுகள் கூட இத்தகைய சூழலில் தலையிட்டு தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பை நிலைநாட்ட முன்வருவர்.

ஆனால், இந்திய பொருளாதாரத்தை ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையாலும் படு குழியில் தள்ளிய மோடி அரசு இந்திய பொருளாதார மேம்பாட்டை விட இந்துத்துவா (பாஜக, ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியை நிலை நிறுத்துவதிலும் , நீட்டிப்பதிலும் தான் அதிக கவனம் செலுத்துகிறது. அந்நிய செலாவணி சந்தையிலும், பெட்ரோ மார்க்கட் என்று சொல்லக்கூடிய எரிபொருள் சந்தையிலும் மோடி அரசு தலையிட்டு இந்திய நாணயமான ரூபாய் மதிப்பை சரி செய்ய மறுத்து வருகிறது வேடிக்கையானது, வினோதமானது. காரணம், இதனால் பன்னாட்டு நிதி முனையத்திடமும்(IMF), சர்வதேச நிதி சந்தை International Finance Market யின் நாளை இந்திய நாடு மண்டியிட வேண்டிய நிலை – இலங்கை நாட்டிற்கு சமீபத்தில் நேர்ந்தது போல் – ஏற்படும். அதன்பிறகு IMF மற்றும் IFM விதிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு இந்திய பொருளாதாரம் – கிறீஸ் நாட்டை போல்- பயணிக்கும் கொடூரம் நடக்கும்.

பொதுவாக நாணய மதிப்பு சரிவு ஏற்படும் காலங்களில் எல்லா முதலாளித்துவ நாடுகளும் தங்கள் நாட்டு கரன்சியை காப்பாற்ற இரண்டு நடவடிக்கைகள் எடுப்பர். முதலாவது, தங்களது வட்டி விகித்த்தை உயர்த்துவது, அடுத்து அந்நிய செலாவணி இருப்பை ரிசர்வ் வங்கி வெளிக் கொணர்ந்து ரூபாய் மதிப்பு சரிவை தடுப்பது. ஆனால், இதை செய்ய மோடி அரசு மறுக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவு டாலர் வலுவாக மாறிய பின் ஒரு சமநிலைக்கு வந்துவிடும் என்று நம்புகிறது.

இந்த சூழலில் இரண்டு காரணிகள் இவர்களது நம்பிக்கையில் மண் அள்ளிப் போட வாய்ப்புள்ளது. ஒன்று, இந்தியாவில் தொடர்ந்து நடப்பு கணக்கு பற்றாக்குறை- Current Account Deficit- நிலவி வருகிறது. இரண்டாவது வர்த்தக பற்றாக்குறை -Trade Deficit- அதாவது ஏற்றுமதி இறக்குமதி வேறுபாட்டால் ஏற்படும் பற்றாக்குறை. நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்தியாவில் நீண்ட காலமாக இருந்தாலும், புதிய தாராளமயக் கொள்கை உலகை கட்டியாண்ட பொழுது இந்தியாவால் உலகெங்கிலுமிருந்து நிதி மூலதனத்தையும்,கடனையும் கடந்த காலங்களில் பெற முடிந்தது, ஈர்க்க முடிந்தது. அதற்கு மூல காரணம் மற்ற முதலாளித்துவ நாடுகளைவிட இந்திய வட்டி விகிதம் அதிகம் என்பது தான்!

ஆனால், இன்றோ உலகெங்கிலுமுள்ள நிதி மூலதனம் மீண்டும் அமெரிக்கா நோக்கியே பாய்கிறது. இதற்கு அமெரிக்க வட்டி விகித அதிகரிப்பும், ஏனைய வளர்ந்த நாடுகளின் பொருளாதார மந்தமும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் செலாவணி நிதி சிக்கலுமே காரணமாகும் .தங்கு தடையற்ற வணிகம், தடையற்ற நிதி பரிவர்த்தனை உலகமே ஒரு குடும்பம் என்றெல்லாம் தம்பட்டமடித்த புதிய தாராளமயம் தனது இறுதி நாட்களில் வணிக பாதுகாப்பு, தடையற்ற வணிகத்திற்கு கட்டுப்பாடு , பொருளாதார தடை போன்ற காரணிகளை கையிலெடுத்ததால் முரண்பட்டு நிற்கிறது. இதனால் நிதி மூலதனம் யாவும் அமெரிக்கா திரும்புவதையே பாதுகாப்பு என்று கருதுகிறது.

பன்னாட்டு நிதி பங்களிப்பு ஆட்டங்காணும் வேளையில் இந்தியா பழைய மாதிரி தனது வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய முடியாது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க இயலாது. எனவே இந்தியா தானே முன்வந்து இந்திய பணம் சரிந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். சரிந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பால் தினம் தினம் நாம் அதிக பணம் கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் .

இதன் சுமை யாவும் சாமானியர்களின் தலையிலேயே விழுகிறது. இந்த நிலை நீடித்தால் இந்தியா இலங்கையைப்போல் அந்நிய செலாவணி குறைந்து இலங்கை நாடு போல் ஐ.எம்.எப்பிடம் கையேந்தும் நிலை ஏற்படும். இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணியை முற்றிலும் புறக்கணிக்கும் மோடி அரசு தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றையே ஒரே கொள்கையாக அக்கறையாக வைத்துள்ளது. அரசு தலையீடு செய்வதென்றால், பொதுத் துறையை கபளீகரம் செய்வது தான் என்று எண்ணுகிறது, பொது சொத்துக்களை அதானிக்கு தாரை வார்ப்பது ஒன்றுதான் என்றெண்ணுகிறது.

பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் நிலை நிறுத்துவதை தவிர, வேறெதிலும் இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறை கிடையாதா அல்லது அதற்கான பக்குவமும் அறிவும் கிடையாதா என பொருளாதார வல்லுநர்கள்-வலது சாரி பொருளாதார நிபுணர்கள் உட்பட எண்ணத் தொடங்கியுள்ளனர்.

வெற்று கோஷங்களும் வீண் ஜம்பங்களும் இந்திய மக்களை பாதுகாக்காது!

;ச.அருணாசலம்