October 17, 2021

வெற்றிக்கான முதல் சுற்றில் கால் பதித்த “இறுதி சுற்று”

தமிழில் மேடி என்று இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் மாதவன். தமிழில் இருந்து இந்தி பக்கம் போனார். ஏனோ கொஞ்ச நாளாகவே தமிழ் பக்கம் வராமல் இருந்தவரை பெண் இயக்கு னர் சுதா “இறுதி சுற்று” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த படம் மூலம் மாதவன் அடுத்த சுற்றுக்கு ரெடியாகி விட்டார் என்றே சொல்லலாம்.

வொய் நாட் ஸ்டுடியோஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், திருக்குமரன் எண்டர்டெய்ன் மெண்ட் என மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் “இறுதி சுற்று”. பெண் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கியிருக்கும் இந்த படம் எந்தவித பெரிய எதிர்ப்பார்ப்பும் இன்றிதான் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம் வீசப்போவது மட்டும் உறுதி.

iruthi sutru jan 29

கதை:

சிகாரில் பெண்கள் குத்துச் சண்டை பயிற்ச்சியாளராக பணிபுரிகிறார் மாதவன். இந்திய அளவில் சிறந்த பயிற்சியாளர் என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ள மாதவனுக்கு (பிரபு ) அவரின் மேலாளர்கள் மூலம் பிரச்சனை வருகிறது. இதனால் அவரை சென்னைக்கு மாற்றுகிறார்கள். சென்னையிலிருந்து ஒரு சாம்பியன் உருவாக்கி காட்டுகிறேன் என சொல்லி சென்னை கிளம்புகிறார்.

காசிமேடு குப்பத்தில் மீன் விற்கும் பெண்ணாக ரித்திகா சிங் (மதி), இவரின் அக்கா கதா பாத்திரத்தில் லக்ஸ். லக்ஸ்க்கு எப்படியாவது குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்று காவல் துறையில் சேர வேண்டுமென்ற ஆசை. ஆனால் மதிக்கோ அப்படியொரு எண்ணமே இல்லை. ஆனாலும், சின்ன வயசிலிருந்தே குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் போட்டிகளை பார்த்து அவரை மாதிரி சண்டைபோட ஆசைப்படுபவர்… அவ்ளோதான்.

இந்த ஆசை …. மதியை, பிரபுவிடம் சேர்க்கிறது. ஆரம்பத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு குத்துச் சண்டை கற்றுக்கொள்ள வரும் மதி ஒருகட்டத்தில் பிரபுவின் உண்மையான வெறியை கண்டு எப்படியாவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமென கடினமாக உழைக்கிறார். மதியின் அக்காவுக்கு பிடிக்காமல் போக சில சூழ்ச்சி வேலைகள் செய்து மதியை போட்டியில் தோற்கடிக்க வைக்கிறார் லக்ஸ். இதில் கோபப்படும் பிரபு சூழ்ச்சி தெரியாமல் மதியை துரத்தி விடுகிறார்.

மீண்டும் பிரபுவிடம் மதி பயிற்சி எடுத்தாரா? பிரபுவின் கனவு நிஜமானதா இல்லையா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

மிளிரும் மாதவன்

பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் மாதவன் சோலோ பர்ஃபாமன்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். படத்தில் பல இடங்களில் மாதவன் பேசும் வசனங்கள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்ஸ்க்கு சவுக்கடியாக இருக்கும். ” …..தா உனக்கு இருக்கு” என பீப் வசனங்களை மாதவன் பேசும்போது மேடி மறைந்து மாதவன் மிளிர்கிறார்.

அழகான பாக்சர்

ரித்திகா சிங் நிஜத்தில் இவர் பாக்சர் என பலருக்கு தெரியாது. நடிப்பின் மீது இவர் வைத்த ஆசை இவருக்கு ஏற்ற கதையாகவே அமைந்தது என பல பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறது இதில். மீன்காரியாகவும் லோக்கல் லேடி ரவுடியாகவும், இண்டர்நேஷனல் பாக்சராகவும் இவரின் நடை மற்றும் ஸ்டைல் அனைவரையும் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு அதிக மேக்கப் இல்லாமல் அழகாகவும் இருக்கிறார்.

இயக்குனர் சுதா

மணிரத்னம் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் என்றாலும் வசனத்திலும், காட்சி அமைப்பிலும் குருவை மிஞ்சிய சிஷ்யையாக இருக்கிறார் இயக்குனர் சுதா. மேலும் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும் எங்கேயும் கழட்டிவிடாமல் படத்தின் இறுதி வரை அவர்களை பயணிக்க வைத்திருப்பது பாராட்டத்தக்கது. பல குத்து சண்டை போட்டி சினிமாக்கள் வந்திருக்கிறது. இது அதை எல்லாம் தாண்டி புது பாதையில் பயணிக்கிறது. திணிக்கப்படாத பாடல்கள் படத்தின் திரைக்கதையை பாதிக்காத வகை யில் அமைந்திருப்பது இயக்குனரின் திறமைக்கு சபாஷ். இவரின் முதல் படத்தை விட இதில் அடித்து ஆடியிருக்கிறார். பெண் இயக்குனர் வரிசையில் சுதாவுக்கு நிரந்தர இடம் உண்டு.

படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு மீண்டும் ஒரு வெற்றி கையில்… பின்னணி இசையிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவு சிவக்குமார் விஜயனையும் பாராட்டியாக வேண்டும்.

இந்த சினிமாவில் உள்ள பயிற்சியாளர்கள் போல நிஜ பயிற்சியாளர்கள் அமைந்தால் கண்டிப்பாக ஒலிம்பிக்கில் இந்தியா வுக்கு தங்கம் உறுதி.

கோடங்கி