October 18, 2021

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!

உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம்.

அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) 2007′ தகவல்படி தொழிலாளர் சந்தையில் 50 லட்சம் குழந்தைகள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது 5-லிருந்து 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம்.
10 - child labour
அரசின் இந்தப் புள்ளிவிவரங்களை மறுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 5 கோடி குழந்தைகள் 5-லிருந்து 14 வயதுக்குள்ளும், 7 கோடி குழந்தைகள் 14-லிருந்து 18 வயதுக்குள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கின்றன.

1986-இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 14 வயதுக்குக் கீழே உள்ளவர்களை “குழந்தைகள்’ என்று வரையறைத்தது. தடை செய்யப்பட வேண்டிய குழந்தைத் தொழில்கள் மற்றும் செயல்முறைகளைப்பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’ வில் குறித்துரைத்தது.

இவ்விரண்டில் சொல்லப்படாத அனைத்து பிற தொழில்களிலும் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை நேரம், வாராந்திர விடுமுறை, வேலையளிப்போர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், அனுசரிக்க வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளை – “ஒழுங்குபடுத்துதல்’ என்ற அம்சத்தின் கீழ் வரையறுத்தது.

தமிழகத்தில் மட்டும் 1997-லிருந்து 2006 வரை 12,32,050 தொழிற்சாலை ஆய்வுகளும் 6,122 விதி மீறல்களும், 4,165 குற்ற விசாரணைகளும், 11,054 குற்றங்களுக்கான தண்டனைகளும், 323 குற்ற விடுதலையும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வளவு குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றனர், மறுவாழ்வு பெற்றனர், எந்தச் சமுதாய மக்களிடையில் வாழ்நிலையிலும் சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களோ, வாழ்க்கை ஆய்வுகளோ அரசிடம் இல்லை.

2012 டிசம்பர் 4-ல் மாநிலங்களவையில், “”வரைவு குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா – 2012” தாக்கல் செய்யப்பட்டது. இது தாரா சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இக் குழு பொதுமக்கள் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர்களிடமிருந்து உகந்த பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறது. இதில் முதன்மைச்சட்டப்பிரிவு 2-இல், குழந்தை என்போர் 14 வயது பூர்த்தியடைந்தவர் அல்லது 2009-ம் ஆண்டின் கட்டாயக் கல்விச்சட்டம் வகுத்துரைத்த வயது அடைந்தோர் – இதில் எது அதிகமோ அது பொருந்தும் என்று கூறுகிறது.

சட்டப்பிரிவு 3, 14 வயதுக்குள்ளான குழந்தைகள் எந்தவொருதொழிலிலும் தொழில்சார்ந்த செயல்முறைகளிலும் ஈடுபடுவதை முழுமையாகத் தடை செய்கிறது. முந்தைய சட்டத்தில் அபாயகரமற்ற தொழில்களில் ஈடுபடுத்துவதை ஒழுங்குபடுத்தலாம் என்றிருந்தது அறவே நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு குடும்பத்துக்கு உதவுவதற்காக வெளியிடங்களிலோ, வயல்வெளிகளிலோ, வீடு சார்ந்த பணிகளிலோ, வனங்களில் விளைபொருள்களைச் சேகரிக்கவோ செல்வதைத் தடை செய்யவில்லை.

அடுத்து புதியதாக பிரிவு 3 (அ)-ல் “வளரிளம் குழந்தைகள்’ என்று 14 வயது பூர்த்தியடைந்து 18 பூர்த்தியடையாத பிரிவினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 1992-ம் ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட “சர்வதேச குழந்தை உரிமைகள் உடன்பாட்டின்படி’ 18 வயது பூர்த்தியடையாத அனைவரையும் குழந்தைகள் என்றே கருதவேண்டும். வளரிளம் பருவத்தினர் என்ற செயற்கைப் பிரிவினை 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும்.

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் வழங்கப்படும் சிறைத்தண்டனை, விதிக்கப்படும் அபராதம் ஆகியவை முதன்மைச் சட்டப்பிரிவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கத்துக்காக இக்குழந்தைகள் வேலை செய்வதை பெற்றோரோ, காப்பாளரோ அனுமதித்தால் “தண்டிக்கலாம்’ என்றும் சொல்லியுள்ளது.

அதைவிட முக்கியம் முதன்மைச்சட்டப் பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’வில் சொல்லி தடை செய்யப்பட்ட 18 குழந்தைத் தொழில்கள், 65 செயல்முறைகளை முழுவதும் நீக்கிவிட்டது. சுரங்கம், தீப்பற்றக்கூடிய – வெடிக்கக்கூடிய பொருள்கள், அபாயகரமான தொழில் செயல்முறைகள் ஆகிய 3-இல் மட்டும் குழந்தைத் தொழிலாளர்களை கட்டாயம் ஈடுபடுத்தக்கூடாது என்று பொத்தம் பொதுவாகக் கூறியிருக்கிறது. இது, பழைய சட்டமே பரவாயில்லை என்ற அளவுக்கு இருக்கிறது.

பிரிவு 14 (அ), இச்சட்டம் மீறுவதை குற்றச் செயலாக, காவல்துறை வழக்காகப் பதிந்து நீதிமன்ற நிவாரணம் மூலம் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக வரையறைத்துள்ளது. இது குழந்தை உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பிரிவு 17 (அ), இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரத்தையும் கடமையையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியுள்ளது.

பிரிவு 17 (ஆ), அபாயகரமான தொழில், தொழில் செயல்முறை இடங்களுக்குச் சென்று குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்று ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.

இப்புதிய சட்டத்தில் மறுவாழ்வுக்கு என்று தனி விதிகள் உருவாக்கப்படவில்லை. திருத்தங்கள் போதாது.

மலர்ந்து மணம்பரப்ப வேண்டிய இளம் தளிர்கள், குடும்ப வறுமை காரணமாக இளவயதுத் தொழிலாளியாக வேலைபார்த்து தங்களுடைய குழந்தைப் பருவத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்து மலர்வதற்குப் பதிலாக வெம்பி,கருகி உதிர்ந்துவிடுகின்றனர். இந்த அவலநிலை நீங்க அரசு, தன்னார்வத் தொண்டர்கள், மக்கள் என்று அனைவரும் பாடுபட வேண்டும்.

(பி. கிருஷ்ணமூர்த்தி) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர் நோக்கம் சார்பான குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர்.