October 19, 2021

வீதிகளில் கிடக்கும் கோதுமையை மேற்கு திசைக்கு அனுப்பி டாலர் வருமானத்தை உயர்த்தலாமே!

அவல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு அருமருந்தாக இயற்கையின் கொடையாகிய மழை இந்தியாவுக்கு பரவலாகவே கிடைத்திருக்கிறது. விவசாய உற்பத்தியியால் நாம் பெறக்கூடிய நன்மையை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதற்குத் தக்கவாறு திட்டமிடுதல் அவசியமாகும். நமது பொருளாதார அவலத்தை நினைக்கவே பயமாக உள்ளது.
EXPORT OF WHEAT
நம்மிடம் உள்ள நிதி இருப்பைக் கொண்டு நமது இறக்குமதிகளுக்கு ஆறு மாதம் மட்டுமே செலவழிக்க முடியும் என்ற அளவுக்கு அன்னிய வர்த்தகப் பற்றாக்குறை தொடர்கதையாக நீடித்துக் கொண்டே போகிறது.

2011-12-இல் 78 பில்லியன் டாலர், 2012-13-இல் 88 பில்லியன் டாலர், 2013-14-இல் 100 பில்லியன் டாலர் என்று ஆண்டுக்கு ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறையில் 10 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை வளர்ச்சி உள்ளது. தொழில் உற்பத்தியில் வளர்ச்சி இல்லை. இறக்குமதியில் வளர்ச்சி உண்டு.

அன்னிய நேரடி முதலீடு வந்தால் பற்றாக்குறை தீரும் என்ற தப்பெண்ணம் உள்ளது. 2011-12 இல் 22.4 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அதிக அன்னிய நேரடி முதலீடு வந்தும்கூட, பற்றாக்குறை 100 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதே அது ஏன்?

நமது வர்த்தகப் பற்றாக்குறையை, நேராக பங்கு வர்த்தகத்திற்குச் செல்லும் அன்னிய நேரடி முதலீட்டாலும் ஏற்றுமதியாலும் ஈடு கட்ட முடியாது. அதற்காக ஏற்றுமதியை கைவிடவும் கூடாது. ஏற்றுமதியை உயர்த்தும் அளவில் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு பாலபாடம் இருப்பதை நமது ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர்.

இறக்குமதியில் முன்னிலை வகிப்பது தங்கம் மட்டுமே (12 சதவிகிதம்).

கட்டித்தங்கம் வெட்டி எடுத்து அனைத்துலக நிதியத்திற்கு ஏற்றுமதி செய்கிறது அமெரிக்கா. அதை இறக்குமதி செய்கிறது இந்தியா. நம்மிடமும் தங்கம் உண்டு. அது கோலார் தங்கமல்ல; இந்தியாவில் கோதுமைத்தங்கம் கொட்டிக் கிடக்கிறது. வெட்டும் செலவும் இல்லை. கோதுமைத் தங்கத்தை ஏற்றுமதி செய்தால் பற்றாக்குறை சுமை குறையும்.

நமது நாட்டின் தேவைக்குப் போக சுமார் 2.4 கோடி டன் கோதுமை உபரியாக இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆகஸ்டு மாதமே 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு – அரசுத் துறை ஏற்றுமதிக்கு – அமைச்சரவை ஒப்புதல் தந்தும்கூட, இதுவரை ஏற்றுமதியாகவில்லை.

இனி வரும் மாதங்களிலாவது சரியானபடி திட்டமிட்டால் இந்தியாவின் கோதுமைத் தங்கம் ஏற்றுமதியை சுமார் 2 கோடி டன்களுக்கு உயர்த்தலாம். அனைத்துலக சந்தை விலை 1 டன் ரூ.15000 என்ற கணக்கில் கோதுமையை நல்ல நிலையில் பாதுகாத்து சுத்தப்படுத்தி விற்றால், 5 பில்லியன் டாலர் நாணயச் செலாவணி பெற முடியும் (1 டாலர் = 64 ரூ. என்ற நாணயநிகரத்தில்). துரித கதியில் ஏற்றுமதி செய்தால் மேற்படி இருப்பைப் பாதுகாக்கும் செலவு சுமார் 2 பில்லியன் டாலர் மிச்சமாகும். சுமார் 45,000 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை ஏற்படாமல் உணவு நிர்வாகம் செய்யலாம்.

உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலானாலும்கூட, 2 கோடி டன் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் 2013-14 கரீஃப் கோதுமை உற்பத்தியுடன், 2013-14 இல் பொழிந்து தள்ளியுள்ள அதிக மழையால் 2014-15 ரபி பருவத்தில் உபரி கோதுமை உற்பத்திக்கும் வாய்ப்பு உள்ளது.

தவிரவும், உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலாக மேலும் ஓராண்டு அவகாசம் தேவைப்படலாம். இப்போது இந்திய வங்கிகள் வெளிநாடுகள் அன்னியக்கடன் விழா (ஸ்வாப் மேளா) நடத்தி டாலர் கடனை இரட்டிப்பு ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோது, நாம் நமது கோதுமைத் தங்கத்தை ஏற்றுமதி செய்தால் ஸ்வாப் மேளா டாலர் கடனைச் சிறிது அடைக்கலாம் அல்லவா?

பிப்ரவரி – ஏப்ரல் மாதம் டன் 290 டாலருக்கு விலை வந்தும்கூட நாம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டாலர் 300 என்பதால் 10 டாலர் பேரத்தால் 20 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவு கார்ப்பரேஷன் ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைத்தது. இப்படி 10 டாலர் விட்டுக் கொடுக்காததால் நாம் 100 டாலர் வரை சேமிப்புக்குச் செலவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போது கோதுமை விலை மேலும் சரிந்துள்ளது. உணவுக் கார்ப்பரேஷனிடம் 4.5 கோடி டன் கோதுமை இருப்பு இருந்தும்கூட ரபி சீசன் கோதுமையை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநில வியாபாரிகள் டன் ரூ. 14,500 விலைக்கு பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்தனர். இது,குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் டன்னுக்கு ரூ. 1,000 மட்டுமே அதிகம். அதனால் இருப்பு இருந்தும் அரசின் ஏற்றுமதி தவிர்க்கப்பட்டதால் உள்ளூரில் கோதுமை விலை ஏறியது.

அனைத்துலக வர்த்தகத்தில், குறிப்பாக கோதுமை வியாபாரத்தில் போட்டி நாடுகள் நிறைய உள்ளன என்பதால், இந்த வியாபாரத்தில் குறைந்தபட்ச கோதுமை ஏற்றுமதி விலை நிர்ணயம் என்று பேசுவது புத்திசாலித்தனம் ஆகாது. ஏற்ற இறக்கத்தை அனுசரித்து பேரத்தை முடிப்பதே சரியான விலைக்கொள்கை. நாம் நமது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, டாலரின் நாணய மதிப்பை ஒட்டி ஒரு டன் 245 டாலர் என்று பேசி முடிப்பது பயனுள்ளது. அனைத்துலகச் சந்தையில் அமெரிக்கா, 270 டாலர், ரஷியா 240 டாலர், உக்ரைன் 235 டாலர், பிரான்ஸ் 240 டாலர் என்று வியாபாரம் செய்யும்போது, இந்திய விலை மட்டும் 300 டாலர் என்றால் எந்த நாடு வாங்கும்? தவிரவும் இந்திய கோதுமையின் தரமும் குறைவானதுதான்.

கால்நடை உணவுக்குரிய சுத்தமற்ற கோதுமையையும் 220 டாலருக்கு மத்திய ஆசிய நாடுகள் வாங்குகின்றன. 300 டாலருக்குக் கீழே விற்க மாட்டேன் என்று இந்திய அரசு முரண்டு பிடித்து மேலும் 100 டாலர் செலவு செய்து பல மாதங்கள் பத்திரப்படுத்தி வைத்து புழுத்து, வண்டு வந்து மாவாகி எடையும் குறைந்து இறுதியில் வந்தவரை லாபம் என்று 150 டாலருக்கு விற்கப் போகிறார்களா?

குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரூ.300 என்று நிர்ணயம் செய்த பிறகு, கால்நடைத் தீவனத் தேவைக்கு இறக்குமதி செய்யும் அரபு நாடுகளிடம் கமிஷன் பெறக்கூடிய வாய்ப்பு வரும்போது, உணவுக் கார்ப்பரேஷனின் தர ஆய்வாளரிடமிருந்து நல்ல கோதுமையையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக “”கால்நடைத்தீவனம்” என்ற சான்றிதழ் வாங்கி 200 டாலர் என்று விற்பார்களா? ஆகக்கூடி நல்ல விளைச்சலும் ஏற்றுமதி வாய்ப்பும் நல்ல விலையும் சேர்ந்து கிடைக்கும் வாய்ப்பு நழுவ விடப்படுகிறது. தாய்லாந்து அரிசிக்கு ஏற்பட்ட கதி இப்போது இந்திய கோதுமைக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிதிக்கொள்கை சரியான தடத்தில் செல்வதால் டாலரின் மதிப்பு வலுவடைந்து செல்கிறது. ஆகவே, அமெரிக்க கோதுமை விலையில் இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. போட்டி நாடுகளுடைய வியாபாரத்தை அமெரிக்கா பற்றிக் கொள்ளலாம். லண்டனின் அனைத்துலக தானிய சபை வழங்கும் தகவலின்படி 2013-14 இல் உலக கோதுமை உற்பத்தி 6 சதவீதம் உயரும். நுகர்வு 2 சதவீதம் மட்டுமே உயரும். விரைவில் இந்தியாவில் கரீஃப் அறுவடை நிகழ உள்ளது. உணவு கார்ப்பரேஷன் 3.45 கோடி டன் இருப்பு வைக்க இடம் தேட வேண்டும். இப்போது அரசின் அரிசி இருப்பு தனியார் அரிசி அரைவை ஆலைகளில் உள்ளன.

இதைப்பற்றி ஏற்கெனவே ஆடிட்டர் ஜெனரல் எச்சரித்துள்ளார். ஆகவே, அரசு செய்ய வேண்டியதெல்லாம் ஏற்றுமதி விலையை அனைத்துலக விலையை ஒட்டிக் குறைத்து ஏற்றுமதியில் ஈடுபட்டால் ரூபாய் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்பு உண்டு. நிதிப்பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றுக்காக அரசுப் பங்கை விற்பதைவிட அரிசி – கோதுமையை விற்பது தவறல்ல!

இந்திய வீதிகளில் கொட்டிக் கிடக்கும் இந்த கோதுமைத் தங்கத்தை மேற்கு திசைக்கு அனுப்பி டாலர் வருமானத்தை உயர்த்தி மேற்கு திசையில் வெட்டியெடுக்கப்படும் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்யாமல் வாழ்ந்தால் இந்தியப் பொருளாதாரம் சீராகும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டால் நஷ்டம் நமக்கே.

ஆர்.எஸ். நாராயணன்