September 29, 2021

‘வி.ஐ.பி கலாசாரம’ ஒழிவதன் தொடக்கம்?!

தேவையில்லாத சஸ்பென்ஸ் கொடுத்து நாலாபக்கமும் விமர்சனங்கள் வர வழி வகுத்த ஆமாத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒருமாதிரியாக முதலமைச்சர் என்ற முள் கிரீடத்தை தரிக்க சம்மதித்து விட்டார்.அரசியலில் நுழைந்ததில் இருந்து ‘மே ஆமாத்மி ஹூம்’ என அச்சிட்ட குல்லா அணிந்து வலம் வந்த அவருக்கு அதில் பெரிய கஷ்டம் இருக்காது. ஒன்றை கழற்றிவிட்டு இன்னொன்றை மாட்டுவதுதானே. ‘மே முக்ய மந்த்ரி ஹூம்’ என கிரீடத்தில் பொறிக்க மாட்டார். ஏனென்றால், இசட் செக்யூரிடி தனக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டார்.
Kejriwal_Protest.24
எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் நான்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள். மூன்றாவது உயர் ரகம் கெஜ்ரிவாலுக்கு. கவர்னரை சந்தித்து விட்டு வந்தவரிடம், ‘பந்தோபஸ்து போடவா’ என போலீஸ் அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். ‘இசட்டெல்லாம் வேண்டாம். நெரிசல் ஏற்பட்டால் சில போலீஸ்காரர்களை அனுப்பி ஒழுங்குபடுத்தினால் போதும்’ என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.இசட் என்றால் 24 மணி நேரமும் வெவ்வேறு வண்ண சீருடைகளில் துப்பாக்கிகள், ஜீப்புகள், வாக்கி டாக்கிகள் சகிதம் 22 போலீஸ் அடுக்கடுக்காக பாதுகாப்பார்கள்.

டெல்லியில் தடுக்கி விழுந்தால் வி.ஐ.பி மீது மோதுவீர்கள்; அல்லது டீவி சேனலில் கருத்து சொல்ல ஓடிக் கொண்டேயிருக்கும் வல்லுனர் மீது விழுவீர்கள்.
எண்ணற்ற தலைவர்கள் இருப்பதாலும், ஒவ்வொருவருக்கும் பெரிய குடும்பம் இருப்பதாலும் நீங்கள் சிக்னலுக்கு காத்திருக்கும் 77 வினாடிகளில் ஏழெட்டு கார் அணிவகுப்புகள் – கான்வாய் – உங்களை கடந்து போகும். சிக்னலுக்கு நிற்காமல்.

‘தேடி வந்து கையை பிடித்து காலில் விழுந்து ஓட்டு கேட்டவர்கள், பதவி கிடைத்ததும் சிக்னலில் நிற்காமல் சொகுசு காரில் விரைவதும், அவர்கள் செல்ல வேண்டிய சில நொடிகளுக்காக நாமெல்லாம் பல நிமிடங்கள் வெயில் மழை பாராமல் காத்திருக்க நேர்வதும் கொடுமை’ என டெல்லி மக்கள் குமுறுகின்றனர். எனவேதான், ‘வி.ஐ.பி கலாசாரத்தை ஒழிப்பேன்’ என்று கெஜ்ரிவால் சொன்னதை கேட்டு ஓட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

சராசரிகளும் காரில் சிவப்பு விளக்கும் சைரனும் பொருத்திக் கொண்டு பறப்பதை சுப்ரீம் கோர்ட் தட்டிக் கேட்டுள்ள சூழலில் நிச்சயம் அது சாத்தியம். உயர்பதவி வகிப்பவர்களும் சிக்னலில் நின்று நெரிசலில் சிக்கி உண்மை நிலவரத்தை உணரும்போதுதான் இந்தியாவை குடியரசு என்று குறிப்பிடுவதில் பொருளிருக்கும்.

(தினகரன் தலையங்கம் )