September 25, 2021

”விலங்குகளை எல்லாரும் நேசிக்கணும்!”-வஞ்சுளவல்லி ஸ்ரீதர் ஐ.எஃப்.எஸ்.

குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறை… சுழலும் நாற்காலி… எதிரே கம்ப்யூட்டர்… 10 டூ 5 ஒயிட் காலர் வேலை! இது இல்லையா… டீச்சர், டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட வேலைகள்… படித்த பெண்களுக்கு இவைதான் பொருத்தம் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இயற்கை கொஞ்சும், அதே சமயம் கொடிய மிருகங்கள் உலவும் அபாயங்கள் நிறைந்த வனத்திலும் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள் நம் பெண்கள்! அவர்களில் ஒருவர் வஞ்சுளவல்லி ஸ்ரீதர் ஐ.எஃப்.எஸ்.
lady - ifs valli 1
இந்திய வனத்துறை அதிகாரியாக தேர்வாகி இருக்கிறார். அதற்கான பயிற்சியில் பிஸியாக இருக்கிறார். நீச்சல், குதிரை ஏற்றம், கயிறைப் பிடித்து கிடுகிடுவென ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்து உடலை உரமேற்றி வைத்திருக்கிறார் என்பது மிடுக்கான தோற்றத்திலேயே தெரிகிறது. கம்பீரமான தோற்றத்துக்குப் பொருத்த மில்லாத மென்மையான குரல். டேராடூனில் தீவிரமான பயிற்சியில் இருந்த வஞ்சுளவல்லி வனத்துறை அதிகாரியான வரலாற்றை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்.

‘‘சொந்த ஊரு சேலம். என் குடும்பத்துல எல்லாருமே டாக்டர்ஸ். சின்ன வயசுல அப்பா கூட அடிக்கடி அவுட்டிங் போவேன். பறவைகளும் பறவைகளோட சத்தமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயோ தூர தேசத்துல இருந்து இவ்வளவு தூரத்துக்கு வரும் பறவைகளைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். ஒவ்வொண்ணையும் காமிச்சு, ‘அது என்ன பறவை?’ன்னு அப்பாகிட்ட கேட்பேன். மழைநாட்கள்ல தவளை போடும் சத்தம், காலையில் சேவல் கூவுறது, மாடு கத்துறதுன்னு ஒவ்வொண்ணையும் ரசிக்க ஆரம்பிச்சேன். எனக்குள்ள விலங்குகள் மீதான ஆர்வம் ஏற்பட்டது இப்படித்தான்.

‘சின்ன வயசு… இப்படித்தான் விளையாட்டுத்தனமா இருப்பா’ன்னு வீட்ல நினைச்சாங்க. ஆனா, விலங்குகளைப் பத்தி தெரிஞ்சுக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் எனக்கு அதிகமானது அவங்களுக்குத் தெரியலை. காடுகள், விலங்குகள் பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். சேலத்துல இருக்கும் ‘தி வைல்டு சேவியர் க்ளப்’, வனத்துறையின் உதவியோட இயங்கிட்டு இருந்துச்சு. இதுல வன ஆர்வலர்கள், மாணவர்கள் உறுப்பினர்களா இருந்தாங்க. அதுல நானும் சேர்ந்தேன். நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துனோம். விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்கள்கிட்ட கொண்டு போனாம். பக்கத்துலயே ஏற்காடு இருந்ததால அடிக்கடி அங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம்.

ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும், ‘வனவியல்ல தான் சேருவேன்’னு தீர்க்கமா வீட்ல சொல்லிட்டேன். மேட்டுப்பாளையத்துல இருக்கும் ‘வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய’த்துல மட்டும்தான் வனத்துறை சார்ந்த படிப்பு இருந்தது. உடனே அப்ளை பண்ணினேன். கட் ஆஃப் மார்க்ல செலக்ட் ஆகி, வனவியல் இளங்கலை கோர்ஸ்ல சேர்ந்தேன். 4 வருஷப் படிப்பு… கிட்டத்தட்ட பாதி நாட்கள் காடு, மலைகள்லதான் வாழ்ந்தோம். ஒரு சின்ன அருகம்புல்லுல ஆரம்பிச்சு காடு சம்பந்தமான பல விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் பெங்களூர், ‘National Center for Biological Sciences’ (NCBS)ல முதுகலை படிக்க சேர்ந்தேன்.

வன உயிரியல் மற்றும் பாதுகாப்பு படிப்பு. 2 வருஷ கோர்ஸ். இந்த நாட்களில்தான் காடுகளில் உள்ள உயிர்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வை செய்தேன். சிறுத்தைப்புலிகளைப் பற்றிய இந்த ஆய்வுக்காக இந்தியாவில் உள்ள எல்லா காடுகளுக்கும் போக வேண்டியிருந்தது. ‘இந்தியாவில் ஒரு வாரத்துக்கு குறைந்தது 4 சிறுத்தைகளை வேட்டையாடிக் கொல்கிறார்கள்’ என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தேன். குறிப்பாக ஆண் சிறுத்தைகளை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தார்கள். சிறுத்தைகளின் தோல்களுக்கு தெற்காசிய நாடுகளில் அதிக டிமாண்ட் இருக்கிறது. அதனால், இங்கே கொன்று அங்கே விற்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னுடைய ஆய்வில் கண்டுபிடித்தேன். ஆய்வு, பெரும் வரவேற்பைப் பெற்றது. விலங்குகள் நம்மைவிட ரொம்ப சென்சிட்டிவானவை. காட்டு விலங்குகளுக்கும், கூண்டில் அடைத்து வைத்து பராமரிக்கும் விலங்குகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரொம்ப சாதுவான இயல்புடைய, தன் இனத்தைச் சார்ந்து வாழும் விலங்கை நாமதான் தேவையில்லாம தொந்தரவு பண்றோம். ஆபத்தை விலை கொடுத்து வாங்குறோம். வீட்டுக்குள்ள பாம்பு வந்தா எப்படி அடிச்சு விரட்டுறோமோ, அது மாதிரிதான் விலங்குகளும் காட்டுக்குள்ள நாம போனா எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.
lady - ifs valli 2
மற்றபடி, மனித இனத்தை அழிக்கணும் என்பது விலங்குகளோட நோக்கம் இல்லை. தொடர்ந்து விலங்குகள் பற்றிய ஆய்வுகளை செய்துட்டு வர்றேன். இப்போ Indian Forest Service‚ (ஐ.எஃப்.எஸ்) செலக்ட் ஆகி, பயிற்சியில் இருக்கேன். 2012 பேட்ச்ல செலக்ட் ஆன 85 பேர்ல நானும் ஒருத்தி. பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான அனுபவம் கிடைக்குது. ஆளரவமற்ற சாலை, தண்ணீர் சூழ்ந்த இடம்னு எல்லாமே ரம்மியமா இருக்கு. இன்னும் சில மாதங்கள்ல வனத்துறை அதிகாரியா பொறுப்பேற்க போறேன். விலங்குகளை எல்லாரும் நேசிக்கணும். நம்ம சுய லாபத்துக்காக விலங்குகளைக் கொன்று, விலை பேசுவதை ஒழிச்சாதான் நம் நாட்டின் செல்வங்களான விலங்குகள் பாதுகாக்கப்படும். ஒரு வனத்துறை அதிகாரியா நான் என்னோட கடமைகளை செய்வேன். ‘வனத்துறை அதிகாரி’ என்ற வார்த்தையே எனக்கு கம்பீரத்தையும் சந்தோஷத்தையும் தருது’’ என்கிற வஞ்சுளவல்லியின் முகத்தில் பெருமிதம் தெரிகிறது!

வனவியல் படிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா?வழிகாட்டுகிறார் வனமரபியல் துறைத்தலைவர் பார்த்திபன்…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ‘வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ மேட்டுப்பாளையத்தில் உள்ளது. ‘Forestry’ என்று சொல்லப்படும் வனவியல் படிப்பு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது. இளங்கலைப் படிப்பு 4 வருடம், முதுகலைப் படிப்பு 2 வருடம் படிக்கலாம். ஆராய்ச்சிப் பிரிவுகளிலும் படிக்கலாம். ப்ளஸ் டூவில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடம் படித்தவர்கள் இந்த கோர்ஸில் சேர தகுதி உடையவர்கள். விவசாயக் கல்லூரியில் நுழையத் தேவையான கட் ஆஃப் முறை இதிலும் உண்டு. காடு, மலைகளில் அலைந்து திரிந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இளங்கலை பிரிவில் படிக்க ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்தத் துறையில் படித்தவர்களுக்கு வேலை என்பது எப்போதுமே உத்தரவாதமான ஒன்று. இந்தியாவில் உள்ள வனச்சரகர் பணியிடங்கள், டி.என்.பி.எல். என எப்போதும் வேலைவாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஐ.எஃப்.எஸ். (I.F.S.) ஆவதற்கு, ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுத் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் குடியுரிமைப்பணித் தேர்வு (Civil Services Examination) எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

தினகரன்