September 20, 2021

விரைவில் இடி படப் போகும் சாந்தி தியேட்டர்! மினி பிளாஷ்பேக்!!

சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்,கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ் மற்றும் திருமண மண்டபங்களாகவும், , அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரும்,நடிகர் திலகத்துக்கு சொந்தமானதுமான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளதாகவும் இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.
shanthi theatre
சிவாஜிகணேசன் நடித்த “ராஜராஜசோழன்”தான் தென்னாட்டின் முதல் சினிமா ஸ்இகோப் படம்.இதைத் தயாரித்த ஜி.உமாபதி உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர். சென்னையில் ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் உமாபதி. தந்தை பெயர் கோவிந்தசாமி முதலியார். பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினாலும், ஏழ்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.12-வது வயதில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடினமாக உழைத்தார். அச்சுத் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டார். பிறகு சொந்தமாக அச்சகம் தொடங்கினார். அதுதான் “உமா அச்சகம்.” பிறகு அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். அதன் மூலம் வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்தார்.

கட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவரான உமாபதி, சினிமா தியேட்டர் ஒன்றை நவீன வடிவமைப்பில் அமைக்க விரும்பினார். இதற்காக அவர் மும்பை சென்றார். அங்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நவீன வடிவமைப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட “மராத்தா மந்திர்” தியேட்டரை பார்த்து அதற்கான செலவு முதலான விவரங்களை கேட்டறிந்தார்.சிவாஜி கணேசனும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சென்னையில் ஒரு நவீன திரையரங்கம் கட்டவேண்டும் என்ற தன் விருப்பத்தை உமாபதியிடம் சிவாஜி தெரிவித்தார். மேலும் தியேட்டரை அமைக்கும் பொறுப்பை உமாபதி ஏற்றார்.

அதன்படி கட்டப்பட்டதுதான் அண்ணா சாலையில் உள்ள “சாந்தி தியேட்டர்.” சினிமாஸ்கோப் படங்களை திரையிடுவதற் கென்றே அகன்ற திரை அமைக்கப்பட்டது. 1,212 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். `பால்கனி’யில் மட்டும் 419 பேர் உட்காரலாம்.இந்த பிரமாண்டமான “ஏசி” தியேட்டரை பெருந்தலைவர் காமராஜர் 1960-ல் திறந்து வைத்தார்.

இது பற்றி உமாபதியின் மகன் `இளம்பாரி’ கருணாகரன்,”“சிவாஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாந்தி தியேட்டரை என் தந்தை கட்டினார். சிலர், `இந்த திரை அரங்கை கட்டிய உமாபதி, அதை நடத்த முடியாமல் சிவாஜிக்கு விற்றுவிட்டார்’ என்று கூறினார்கள்.அது ரொம்ப தப்பு” என்றார்.

பின்னர் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும்.சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன. 2005ல் ரஜினி திறப்பு 2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.

இதனிடையே அந்த தியேட்டரில் தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்றும் விரைவில் தியேட்டர் இடிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக, சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.