September 17, 2021

விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
nov 22 - edit awards
பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது. இந்திய அரசின் அங்கீகாரம் என்பதால் அதனை அடைய ஒவ்வொருவரும் அரும்பாடுபடுகிறார்கள். யார் யாரையோ பிடித்து பரிந்துரை செய்ய வைக்கிறார்கள். செல்வாக்கு பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள். மாநில அரசுகளும் சிபாரிசு செய்வதுண்டு. இறுதி முடிவை மத்திய அரசின் உள்துறை எடுக்கிறது.

2013ஆம் ஆண்டில் 1,300 பேர், பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். அதில் 108 பேர் விருது பெற்றார்கள். யாரெல்லாம் யார்யாரால் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சினிமா பின்னணி பாடகியும் பாரத் ரத்னா விருதுபெற்றவருமான லதா மங்கேஷ்கர், தன் சகோதரி உஷா மங்கேஷ்கர், பாடகர் சுரேஷ் வடேகர், கலை ஆர்வலர் ராஜ்மல் பரேக் ஆகிய மூவருக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை. சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி அமர் சிங், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபிரதாவின் பெயரைப் பரிந்துரைத்தார். பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான், தன் இரு மகன்களோடு மேலும் நான்கு பேருக்கு விருது கொடுக்க பரிந்துரை செய்தார். மோதிலால் வோரா என்ற காங்கிரஸ் தலைவர் இருபத்தைந்து பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். பல மத்திய அமைச்சர்கள், பலருக்குப் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்கிறவர்கள் சொல்லும் ஒரே காரணம், நாங்கள் மக்கள் தொண்டர்கள். தகுதி வாய்ந்தவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம். எங்கள் சேவையில் அது ஓர் அம்சம். எனவே குறை சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

ஆள்பிடித்து விருது வாங்கிக் கொண்டு பெரிய விழா நடத்திக் கொள்கிற கூட்டத்தில் சேராமல், அதனை நிராகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சினிமா பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பத்மவிபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். தனக்கு வெகு தாமதமாக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார். அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்து வைத்துவிட்டது. விருது அறிவிப்பதோடு அரசு வேலை முடிந்துவிட்டது.

2,577 பேர் இதுவரை பத்ம விருதுகள் பெற்றிருக்கிறார்கள். 1957-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ பெற்ற முதல் தமிழர், எஸ்.ஆர். ரங்கநாதன் என்று அறியப்பட்ட சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். நூலகத்தில் இடம்பெறும் புத்தகங்களை வகைப்படுத்த, “கோலன்’ என்னும் குறியீட்டு முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான். அம்முறை உலகளாவிய முறையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ பெற்றவர்களில் ஒருவர் – ஜப்பானியரான கரோஷிமா. இவர் தமிழ்த் தொல்லியல், இலக்கிய ஆய்வாளர்.

இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னா, 1954ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் தொடங்கப்பட்டது. பணம் கிடையாது. அரச இலை வடிவிலான மெடல். அதன் ஒரு பக்கத்தில் “பாரத் ரத்னா’ என்பது தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது; மறுபுறம் மூன்று முகசிங்கம். முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர்கள் சர்.சி.வி. ராமன், ராஜாஜி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இரண்டாவது ஆண்டில் விருது பெற்றவர் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு.

உயிரோடு இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் பாரத ரத்னா என்று முதலில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் மரணமுற்ற மகத்தான மனிதர்களுக்கும் பாரத் ரத்னா கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மரணமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டு வல்லபபாய் படேல், அம்பேத்கர், விநோபா பாவே, காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி உள்பட பலருக்கு பாரத ரத்னா கொடுத்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸூக்கு 1992-ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பிந்தைய பாரத ரத்னா கொடுத்தார்கள். அவர் மரணம் உறுதி செய்யப்படவில்லை, எனவே மரணமுற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பது முறையல்ல என்று வழக்குத் தொடரப்பட்டது. எனவே அரசு அவ்விருதை திருப்பிப் பெற்றுக் கொண்டது.

பாரத ரத்னா விருது எந்தத் துறையினருக்கும் கொடுக்கலாம் என்று இருந்தாலும் அதில் விளையாட்டுத்துறை சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்டுதான். அது கேளிக்கையின் உச்சமாகிவிட்டது. நாள் முழுவதும் ஆடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அதனைக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் புகழ் மிக்கவராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். விதிமுறையில்லையென்றால் புது விதி உண்டாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைத்தார்கள். மத்தியில் ஆளும் கட்சி ஏதோ காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து விட்டது. உடனே ஊடகங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. எதிர்ப்பவர்கள் ஹாக்கி வீரர் ஒருவருக்குதான் தந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் வாதத்தில் தவறில்லை. ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு. அது ஒலிம்பிக்கில் ஆடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஆடி நாம் தங்க மெடல் பெற்றிருக்கிறோம். கிரிக்கெட் ஒலிம்பிக்கில் கிடையாது.

நான்காயிரம் ஆண்டுகளாக செஸ் எனப்படும் சதுரங்கம் இந்தியாவில் ஆடப்பட்டு வருகிறது. அது இந்தியாவில் பிறந்தது. இன்று உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது. அறிவாளிகள் ஆட்டமாக அது அங்கீகாரம் பெற்றிருக்கிறது. செஸ் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஓர் இந்தியர். அவருக்குத்தான் முதன்முதலாக பாரத் ரத்னா தரவேண்டும் என்று சிலர் பேசவும் எழுத ஆரம்பித்தார்கள்.

உயர்ந்த விருது என்றால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும், தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பலர் விரும்புகிறார்கள். அதில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமூக சேவகர்கள், நடிகை நடிகர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் போன்ற பலரும் இருக்கிறார்கள்.

அவர்களில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் கலந்தே இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்னை முற்றியதால் 2008ஆம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது கொடுப்பதை அரசு நிறுத்தி வைத்தது.

உலகம் முழுவதிலும் உயர்ந்த விருதுகள் கொடுக்கப்பட்டபோதெல்லாம், இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்றும் இவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதுபோது, மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாதது பற்றி பேசப்பட்டது. சிலருக்கு விருதுகள் அறிவிக்கும்போது எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதற்கு உதாரணம், இவ்வாண்டு விஞ்ஞானி சி.எஸ்.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே பரிசு, விருது என்பவற்றை அர்த்தம் பெற வைக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் நாற்பத்து மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருந்து விருது பெற்றவர்களும், மரணத்திற்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகு விருது பெற்றிருக்க வேண்டியவர் மகாத்மா காந்தி. “பெரிய விருது’ என்று அறியப்படும் பாரத் ரத்னா அவரைப் பொருத்தவரை “சிறிய விருது’ என்று கருதி அவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் போலும்.

சா. கந்தசாமி