October 22, 2021

விண்ணில் பாய்ந்தது பி.எஸ் எல்.வி சி ராக்கெட்!

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி நேவிகேஷன் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 20 நிமிஷங்கள் பயணத்துக்குப் பிறகு தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளை ராக்கெட் செலுத்தியது. பூமியிலிருந்து அதிகபட்சம் 20,670 கிலோமீட்டர் தொலைவும், குறைந்தபட்சம் 282.5 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட இந்தப் பாதையில் செயற்கைக்கோள் சுற்றி வருகிறது.. பெங்களூருக்கு அருகில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு மையத்தித்திலிருந்து செயற்கைக் கோளிலுள்ள திரவ மோட்டார் இயக்கப்பட்டு, திட்டமிட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.
B S L V
மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட், இரவு நேர வானத்தில் மிகப்பெரிய வெளிச்சத்துடனும், சத்தத்துடனும் விண்ணில் பாய்ந்தது. எக்ஸெல் வகை ராக்கெட் என்பதால் இதன் பக்கவாட்டில் மொத்தம் 6 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன இந்த வெற்றியோடு சேர்த்து இதுவரை மொத்தம் ஏவப்பட்ட 28 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் 27 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்த்தார்.

விஞ்ஞானிகள் மத்தியில் அவர் பேசும்போது, ”விண்வெளித் துறையில் இந்தியா வல்லரசாக மாறி வருவதை பி.எஸ்.எல்.வி.யின் இந்த வெற்றி நிரூபித்துள்ளது” என்று கூறினார்.

67 மணி நேர கவுன்ட் டவுன்:

பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்டுக்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் அக்டோபர் 13-ஆம் தேதி காலை 6.32 மணிக்குத் தொடங்கியது. முதற்கட்டமாக ராக்கெட்டின் 4-வது நிலையில் உள்ள மோனோ மீதைல் ஹைட்ரசைன் எரிபொருள் நிரப்பப் பட்டது. ராக்கெட் ஏவப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது.இந்திய நேவிகேஷன் அமைப்புக்காக செலுத்தப்படும் மூன்றாவது செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ்-1சி ஆகும். ஏற்கெனவே, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி ஆகிய செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இந்திய நேவிகேஷன் அமைப்புக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.

ஜி.பி.எஸ். அமைப்பு போன்று இந்தியப் பிராந்தியத்தில் தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கு உதவுவதற்காக இந்திய நேவிகேஷன் அமைப்பு உருவாக்கப்படுகிறது.இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், பேரிடர் மீட்புப் பணிகளுக்கும், வரைபட தயாரிப்பு போன்றவற்றுக்கும் உதவும். வாகன ஓட்டுநர்களுக்கு ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும்.
போக்குவரத்துக்கான தகவல்களை வழங்குவதோடு, ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கும் துல்லியமான தகவல்களை இந்த அமைப்பின் மூலம் வழங்க முடியும்.

மொத்தம் 1425 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தச் செயற்கைக் கோளில் லேசர் அலைக்கற்றை மூலம் தொலைவை துல்லியமாக கணக்கிட கார்னர் கியூப் ரெட்ரோ ரிஃப்ளக்டர் என்ற கருவியும், சி-பேண்ட் டிரான்ஸ்பான்டர், ருபிடியம் அணு கடிகாரம் உள்ளிட்ட கருவிகள் உள்ளன. 4 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை ஏவினாலே இந்த அமைப்பைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.