September 24, 2021

விஜயகாந்துக்கு ஒரு விண்ணப்பம்!

தே.மு.தி.க.,வை விஜயகாந்த் தொடங்குவதாக கடந்த 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அறிவித்தார். தற்போது கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்று ஒன்பதாவது ஆண்டைக் கடந்து சென்று கொண்டுள்ளது அக்கட்சி.அதிமுக – திமுகவுக்கு மாற்றாக விஜயகாந்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை அப்போது நல்கியதன் விளைவு இன்றைய தேதியில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்து தேமுதிகவுக்கு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியும் விஜயகாந்த் வசம் உள்ளது.
vijayakanth-like mgr
இதையெல்லாம்விட மிகப்பெரிய வாய்ப்பாக 2014 மக்களவைத்தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.க.,, அரசியலில் பழுத்த பழங்களான வைகோவின் மதிமுக, மருத்துவர் ராமதாசின் பா.ம.க, கல்வித் தந்தைகளும், பெரும் முதலாளிகளுமான ஐ.ஜே.கே பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் என பெரிய பெரிய ரயில்பெட்டிகளின் எஞ்சின் அதாவது கூட்டணியின் அதிகபட்ச வேட்பாளர்களைக்கொண்டுள்ள கட்சி என்ற பொறுப்பு, கடமை தேமுதிகவுக்கு கிடைத்தது.

இதற்கு தகுந்தாற்போல அதிமுகவும் அந்தக் கட்சியின் பிரச்சார பீரங்கியுமான ஜெயா தொலைக் காட்சியும் விஜயகாந்தின் பெயரை எவ்வளவு சிதைக்க முடியோ அவ்வளவு சிதைத்து வருகிறது.
அதிமுகவின் இந்த எதிர்ப்பையே விஜயகாந்த் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக, தனக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவமாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்கேற்றார்போல தனது பரப்புரை முதற்கொண்டு எல்லா தேர்தல் பணிகளையும் திட்டமிட்டிருக்க வேண்டும்.

முக்கிய இடங்களில் மட்டும் தான் தோன்றி கூட்டணி பலம் பற்றியும், தேர்தல் நோக்கம் பற்றியும் பேசியிருக்க வேண்டும் மீத நேரங்களில் மேடையிலோ, தொலைக்காட்சியிலோ தோன்றாமல் பல காரியங்களைச் சாதித்திருக்க முடியும். விஜயகாந்த் ஒரு நல்ல மேலாண் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தால் மிக அரிய காரியங்களை இந்த தேர்தலில் சாதித்து இருக்க முடியும். காரணம், நடிகர் சங்க செயற்பாட்டில் அவரது ஆளுமை திரையுலகமே அறியும் அளவுக்கு நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது. காரணம் சினிமா அவருக்குத் தெரிந்த துறை.

ஆண்டுக்கு ஒரு படம். அதற்கும் தன் விருப்பப்படி கால் ஷீட், ஒரு டேக் சரி வரவில்லை என்றாலும்கூட மீண்டும் மீண்டும் சவுகரியப்படி எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதிகள் எல்லாம் அரசியல் தளத்தில் கிடையாது. நினைத்த நேரத்திற்கு உறங்க முடியாது.

அதே போல பிற கட்சிகளோ…பொதுமக்களோ…உங்கள் தொண்டர்களோ..கூட்டணிக் கட்சி தொண்டர்களோ..உங்கள் ஸ்டன்ட் யூனியன், சினிமா யூனியன் உறுப்பினர்கள் அல்ல….நீங்கள் எப்படி ட்ரீட் செய்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு. அதே போல அனைத்து பத்திரிகையாளர்களையும் சினிமா பத்திரிகையாளர்கள் என்று எண்ணிக்கொள்வதையும் மாற்றிக்கொள்ளுங்கள். நிஜம் வேறு.

மக்களோடு மக்களாக இருக்க வேண்டுமானால்…நீ என்ன உயரத்தில் நிற்க விரும்புகிறாய்…அவ்வாறு நின்று நீ என்ன சாதிப்பாய் என்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கேற்றார்போல முன்னிறுத்த வேண்டும். திரையுலக மக்கள் கேப்டன் என்றதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டனர். அதையே பொதுமக்கள் வேறு விதமாய் உணர வேண்டும். உணரும்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் விஜயகாந்துக்கு உள்ளது.

தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் இந்த தருணத்தில் எழுதவேண்டி இருப்பதற்கு காரணம்..கூட்டணித் தலைமை இருந்தும்கூட பல வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முக்கிய கட்சியாக இருந்தும்கூட…தேமுதிக என்ற கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு வளர்ச்சித் தேர்தல் அல்ல என்ற தேர்தல் கள நிலவரம்தான்.ஏணிப்படியாக இருப்பதை விடுத்து அந்த ஏணியில் தமது கட்சியும் ஏற வேண்டும் என்பதை உணர வேண்டிய தருணம் தேமுதிகவுக்கு வந்துவிட்டது. அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டும்.

செய்விர்களா கேப்டன் ???

தலைமைச் செய்தி ஆசிரியர்
TNTV-SBNN செய்திச் சேவை

1 thought on “விஜயகாந்துக்கு ஒரு விண்ணப்பம்!

Comments are closed.