October 20, 2021

விக்கிலீக்ஸ் அசாஞ்சே-வுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை கைவிட ஸ்வீடன் முடிவு!

கடந்த 2010-ஆம் ஆண்டில், ஜூலியன் அசாஞ்சே மீது இரு ஸ்வீடன் நாட்டுப் பெண்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அசாஞ்சே மீது, ஸ்வீடன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்டிருந்த கைது ஆணையை நீக்குமாறு, ஸ்வீடன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அசாஞ்சே. ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்த உத்தரவிடுவார்கள் என உணர்ந்த அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தப்பித்து வந்தார்.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், தன்னை ஸ்வீடன் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் இறங்கும் என்பதால், தலைமறைவாகவே வாழ்ந்துவந்தார் ஜூலியன் அசாஞ்சே. தற்போது அவர், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, விசாரணையில் பங்கு பெறுவது சாத்தியமில்லாததால், இந்த வழக்கைக் கைவிடுவதாக ஸ்வீடன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 2020-க்கு முன்னர், ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டிற்கு வந்தால் , இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

இதனிடையே தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்ட பிராட்லி மேன்னிங் என்ற செல்ஸீ மேன்னிங் ராணுவத்தில் பணியாற்றிய போது 7.5 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த ஒபாமா இவரது தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் செல்ஸீ மேன்னிங் நேற்று விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது