September 29, 2021

விஏஓ 2,342 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜூன் 14 -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VAO EXAM_
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 15ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு ஜூன் 14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வு கட்டணம் ரூ.125 (விண்ணப்ப கட்டணம் ரூ.50, தேர்வு கட்டணம் ரூ.75). தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவ கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் இணையவழி மூலமாக மட்டுமே, தேர்வாணைய இணையதள முகவரியான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏப்ரல் 15ம் தேதி இரவு 11.59 மணி வரை திறக்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான 20 சதவீதம் இட ஒதுக்கீடு இத்தேர்வுக்கு பொருந்தும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட் டுள்ள கல்வி தகுதியை தமிழ் வழியில் பயின்று அதற்குரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு பொது அறிவில் இருந்து 75 வினாவும், கிராம நிர்வாக நடைமுறைகள் 25 வினாவும், திறனறிவு தேர்வு 20 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப் படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு மையங்கள், தடையின்மை சான்றிதழ், இணையவழி விண்ணப்பித்தல் மற்றும் தேர்வு கூடத்தில் நடந்து கொள்ளும் முறை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.