September 17, 2021

வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் குரல்!

இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. மற்ற எல்லா தேர்தல்களையும் விட இந்த தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் இந்த அளவிற்கு தேர்தல் ஜுரம் பரவுமா என்பது சந்தேகமே. இப்போது நாடெங்கிலும் ஒரு பரபரப்பு. கூடா நட்பு கூட்டணிகளின் கட்டுக்குக்குள் வராத குழப்பம், எங்கு கொண்டு விடுமோ என்ற கலக்கம்.டி.என். சேஷன் தேர்தல் ஆணையராயிருந்த காலத்திலிருந்தான் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப் படவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக செயல்படத் துவங்கியது. முன்பெல்லாம் கட்சிக்கொடியேற்றிய வாகனங்கள் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் காட்சி சாதாரணமானது. கட்சிகொடிகளும் விளம்பரங்களும் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும். விடிய விடிய தேர்தல் பிரசாரம் நடக்கும். பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிபெருக்கி முழங்க பிரசாரம் பொதுக்கூட்டம், மேடைகள், போஸ்டர்கள் என அல்லோலகல்லோலப்படும். தேர்தல் நாள் நெருங்க நெருங்க கூட்டங்களும் கூச்சலும் அதிகரிக்கும்.
india-electronic-vote-
இப்போது எல்லாம் மாறிவிட்டது. பொதுக்கூட்டங்கள் குறைவு. வண்டியிலே தெருக் கூட்டம் என்பது வழக்கத்திற்கு வந்துவிட்டது. இந்த மாறுதலுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை சீராக நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கைதான். பொதுக்கூட்டங்கள் கட்டாயமாக இரவு பத்து மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற விதி தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினருக்கு பெரும் நிம்மதி. இல்லாவிட்டால் இரவு பகலாக அவர்கள் அலைய வேண்டும்.

ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி வழங்குவதும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் உபயோகிக்கக்கூடாது. பெட்டி வகை ஒலிபெருக்கிதான் வைக்க வேண்டும். மேலும் தனியார் கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட முடியாது. விளம்பரங்கள் எழுதக் கூடாது. இவை வரவேற்கத்தக்க விதிமுறைகள்.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் கட்சி விளம்பரச் சின்னங்கள் இருக்கக் கூடாது; 200 மிட்டர் தள்ளிதான் கட்சி பூத்துகள் இருக்க வேண்டும் என்ற விதிகளும் முறையாக அமல்படுத்தப்படுவதால் வாக்குச் சாவடி பாதுகாப்பு நன்கு அமைகிறது.

வாக்குச் சாவடி முற்றுகை என்று முன்பெல்லாம் செய்தி வரும். வாக்குச்சாவடிகளின் ஆளுகைக்குட்பட்ட எல்லா வாக்குகளையும் உள்ளுர் தாதா ஒருவர் உதவியுடன் பலம் வாய்ந்த சில சமூக விரோத வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக போட்டுவிடும் அடாவடிச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய வெற்றி.

இந்த வெற்றியை அன்று சாதித்தவர் டி.என். சேஷன். மேலும் ஸ்திரப்படுத்தியவர்கள் அவருக்குப் பின்பு பொறுப்பேற்ற டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என். கோபால்சாமி, இப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் ஆகியோர். நேர்மையான தேர்தல் நெறிகளை நமது நாட்டில் நிலைநாட்டி உலக அளவில் இந்திய தேர்தல் முறை புகழப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இம்மூன்று தமிழர்கள் என்பது நம் தமிழ் நாட்டுக்குப் பெருமை.

தேர்தல் பாதுகாப்பு காவல்துறைக்கு ஒரு விசேஷமான பணி. பெரும் சவாலும் கூட. தமிழகத்தில் மொத்த வாக்குச் சாவடிகள் 60,418. வாக்குச்சாவடி காவலில் இருந்து நாடாளுமன்றத் தொகுதி எல்லை வரை பாதுகாப்பு படிப்படியாகக் கணக்கிடப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. வாக்குச்சாவடியை சுற்றி முதல் பாதுகாப்பு வளையம். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள், தேவையான பொருள்கள், தேர்தல் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனப்பாதுகாப்பு இரண்டாவது வளையம். ஒவ்வொரு சரக காவல் நிலைய ரோந்து வாகனம் மூன்றாவது வளையம். சரக துணை கண்காணிப்பாளர் தலைமையில் நான்காவது வளையம். நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டசபை தொகுதி வாரியாக பணிக்கப்படும் ரோந்து வாகனம் ஐந்தாவது வளையம். நாடாளுமன்ற தொகுதிக்கு உயர் அதிகாரி தலைமையில் ஆறாவது வளையம். அதற்கும் மேலாக மாவட்ட காவல்துறை தலைவர் தலைமையில் ஏழாவது வளையம் என்ற வகையில் பாதுகாப்பு வளையங்கள் புனையப்படும். தமிழக காவல்துறை அனுபவ ரீதியாக பலப்படுத்திய இந்தகைய சக்கரவியூகத்தை தகர்ப்பது மிகவும் கடினம்.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பாதுகாப்பு முற்றுகை என்ற அடிப்படையில் முக்கிய நுழைவு சாலைகளில் அதிக பாதுகாப்பும் சோதனைச் சாவடிகளிலும் போடப்படுகின்றன. எல்லா சோதனைச் சாவடிகளும் விடியோ மூலம் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகன தணிக்கையின் போது ஆயுதங்கள், பரிசுப்பொருள்கள், பண நோட்டுக் கட்டுகள் மறைக்கப்பட்டிருக்கின்றனவா என்று சோதனை செய்யப்படுகிறது. மிக நூதன முறையில் இருக்கைக்கு அடியிலும் உதிரி சக்கரத்தின் உள்ளிலும் ஒளித்துவைதிருப்பதை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவால்.

வெளியிலிருந்து வரும் சந்தேக நபர்களை கண்காணிப்பது, லாட்ஜுகளில் புதிதாக தங்குபவர்கள் விவரம், சுற்றுலா மையங்களில் கண்காணிப்பு, முக்கிய நபர் பாதுகாப்பு என்று நீண்ட பாதுகாப்பு பட்டியல் தயாரித்து அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை மாவட்ட காவல்துறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் விதிகள் கடைபிடிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை கண நேரத்தில் உறுதி செய்ய தற்போது கணினி மற்றும் மொபைல் தொழிநுட்பம் பெரும் உதவியாக உள்ளது. கைபேசி குறுஞ்செய்திகள் மூலமாக வாக்குச் சாவடிக்கு பொருள்கள் அடைந்தது, அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பது, தேர்தல் நாளன்று வாக்கெடுப்பு துவங்கியது, முடிவுற்றது, முடிவாக பொருள்கள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது, வாக்கு எண்ணும் மையத்தில் சேர்த்தது போன்ற எல்லா செய்திகளையும் தொகுத்து வகுத்து சுலபமாக அறிய முடிகிறது. இதே வகையில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலும் மின்னணு பெட்டிகளின் போக்குவரத்தினை மிக எளிதாக மேற்பார்வையிட முடியும்.

மேட்டூர், கிருஷ்ணகிரி, ஜவ்வாது மலை, நீலகிரி போன்ற காவிரிக்கரை மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பு, மின்னணு பெட்டிகளின் வரவு இவற்றை துல்லியமாக அறிய முடியும்.

முன்பு வான் தந்தி மூலமாகவும் போலீஸ் வயர்லஸ் மூலமாகவும் செய்திகள் அனுப்பப்படும். அவற்றை ஒருவர் கேட்டு குறித்து கணக்கெடுக்க வேண்டும். இதை கணினி சுலபமாக செய்துவிடும். “வெப் காஸ்டிங்’ மூலமாக பதட்டம் நிறைந்த இடங்களில் நடப்பவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்தே மேற்பார்வையிடும் திட்டம் வரவேற்கத்தக்கது.

எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கோட்பாடுகள் என்பது தேர்தல் ஆணையம் முறையாக அறிவிப்பு ஆணை பிறப்பித்த பிறகுதான் அமலுக்கு வரும். தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமற்ற நடுவர். எந்த தரப்பினரும் முறையற்ற சலுகை பெறாமல் பார்த்துக் கொள்வது, எல்லோருக்கும் தேர்தல் களத்தில் போட்டியிடுதற்கு சமவாய்ப்பு வழங்குதல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை முறையாக அமல்படுத்துவது, சட்ட மீறல்களுக்கு நடவடிக்கை எடுத்தல், தேர்தல் பார்வையாளர்களை நியமித்தல், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து பணிகளை செவ்வனே நிர்வகித்தல், வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான பாதுகாப்பை உறுதி செய்தல், முடிவாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகியவை ஆணையத்தின் முக்கியமான பணிகள்.

தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு அரசு தரப்பில் புதிய அறிவிப்புகளோ, செயல் திட்டங்களோ வழங்கக் கூடாது. அரசு தரப்பில் விழாக்கள் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. முக்கிய முடிவுகளை தேர்தல் ஆணையத்தை கலந்தாலோசித்து எடுக்கலாம். அதற்காக அரசுப்பணிகள் எல்லாம் முடங்கி விட வேண்டிய அவசியமில்லை. முடங்கவும் கூடாது. துவங்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

தேர்தல் நேரத்தில் வேறு எந்தப்பணியும் மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு தவறான எண்ணம் பல துறைகளில் நிலவுகிறது. அல்லது தேர்தல் பணியை முன் வைத்து மற்ற பணிகளை தள்ளி வைக்கவோ தாமதிக்கவோ சால் ஜாப்பு என்பார்களே அதுபோன்று சாக்கு போக்கு கூறும் சுணக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். அரசு இயந்திரம் எந்நிலையிலும் ஸ்தம்பிக்கக் கூடாது. எதற்கொடுத்தாலும் தேர்தல் விதிகளை மேற்கோளிட்டு சிறுபிள்ளைத்தனமாக சண்டையிடும் அரசியல்வாதிகள் மக்கள் நலனை சிறிதாவது மனதில் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனம் 326 உறுப்பின்படி பதினெட்டு வயதுக்குக் குறையாத, மனநிலை குன்றாத இந்தியக் குடிமகனுக்கு வாக்குரிமை உண்டு. எல்லா தரப்பினருக்கும் வாக்குரிமை என்பது சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் அரசியல் சாசனம் மூலம் நமக்கு அளித்த மிக உயர்ந்த பொக்கிஷம். ஜனநாயகத்தின் உறைவிடமான அமெரிக்காவிலேயே எல்லோருக்கும் வாக்குரிமை படிப்படியாகத்தான் அளிக்கப்பட்டது.

மகத்தான தியாக வேள்வியில் பிறந்தது நமது சுதந்திரம். வாக்குரிமை நமக்கு அளிக்கப்பட்ட கடமையோடு கூடிய பரிசு. அது ஜனநாயகத்தின் குரல். அதனை இனிய கீதமாக பரிமளிக்கச் செய்வது நமது கடமை.

ஆர். நடராஜ்.