September 17, 2021

வாக்குக் கேட்டு ஸ்பெஷல் வாகனத்தில் கிளம்பும் விஷால் டீம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத் குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. இரு தரப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வசிக்கும் நடிகர், நடிகைகளிடம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர். வெளிமாநிலங்களில் வசிக்கும் நதியா, நக்மா, அமலா, அனுஷ்கா, தமன்னா, அசின் உள்ளிட்ட நடிகைகளிடம் தனி குழுக்களை அனுப்பி வைத்து ஓட்டு சேகரிக்கின்றனர்.
nadigar sangam oct 7
இந்தத் தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள். இவர்களின் ஓட்டுகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப் பவைகளாக உள்ளன. எனவே நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்ட இரு அணியினரும் வரிந்து கட்டி இறங்கியுள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், கரூர் நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் நாடக நடிகர்-நடிகைகள் உள்ளனர். சரத்குமார் அணி சார்பில் ராதா ரவியும் அவரது ஆதரவு நடிகர்களும் இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இதுபோல் விஷால் அணியினரும் நாடக நடிகர்களிடம் ஓட்டு சேகரிக்க புறப்படுகிறார்கள். சென்னையில் இருந்து தனி பஸ்சில் அவர்கள் செல்கின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, மற்றும் ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, ராஜேஷ், கோவை சரளா, நந்தா, ஸ்ரீமன், ரமணா, பிரசன்னா, உதயா, பூச்சி முருகன், சங்கீதா, சோனியா உள்ளிட்ட செயற்குழு பதவிகளுக்கு போட்டியிடும் 24 பேர் அந்த பஸ்சில் பயணமாகிறார்கள். அவர்களுடன் ஆதரவு நடிகர்களும் செல்கிறார்கள். மொத்தம் 40 பேர் செல்கின்றனர். இவர்கள் 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துக் கூட்டங்கள் நடத்தி நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்கின்றனர்.

மேலும் சென்னையில் வருகிற 16-ந்தேதி ஆதரவாளர்கள் கூட்டத்தையும் கூட்டி உள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர்கள், மற்றும் நாடக நடிகர்-நடிகைகளை திரட்டி தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர்.