September 21, 2021

”வழக்கை நடத்த செலவான ரூ.5.11 கோடியை தாங்கம்மா!” -தமிழக அரசிடம் கோரும் கர்நாடகா

பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,”தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பெங்களூரு தனிக்கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த மேல் முறையீட்டு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.
jaya jun 5
மேலும் கர்நாடக அரசு தரப்பு வாதமும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இந்த வழக்கை நடத்துவதற்கு கர்நாடக சட்டத்துறை சார்பில் ரூ.5.11 கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு உள்ளேன். அதுபற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செலவு தொகையையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம்.

மேலும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம். இந்த வழக்கிற்கு ஆகும் செலவை தமிழக அரசிடம் இருந்து பெற்று கொள்ளும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.’’என்று அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்தார்.