September 20, 2021

வலைதளங்களில், ரம்மி, போக்கர் ஆடறீங்களா? அப்ப உங்கள் மீது பிளாக் மணி ஆக்ட் பாயும்!

”கருப்புப் பணம் பதுக்கல், ஹவாலா மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்களை தடுக்க வகை செய்யும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த நிதியாண்டில் 52 பேர் கைது செய்யப்பட்டனர். இவை தொடர்பாக 173 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரூ.9,003 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாட்டு வலைதளங்கள் நடத்தும் ‘ரம்மி, போக்கர்’ போன்ற ‘ஆன் – லைன்’ விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் லாபத்தையும், கறுப்பு பணம் சட்டத்தின் கீழ் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியமான சி.டி.பி.டி., அறிவித்துள்ளது.
rummy game
இது குறித்து, அதன் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரத்தின்படி, “வலைதளங்களில் சீட்டு கட்டுகளை வைத்து விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற ஆட்டங்களில் பங்கேற்க ‘இ – வாலட்’ மற்றும் ‘விர்ச்சுவல் கார்டு’ ஆகியவை மூலம் பணம் செலுத்தப்படுகிறது. இவை இரண்டும் வங்கி கணக்கு போன்றவை தான். அதனால் அத்தகைய விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் லாப விவரங்களையும் கறுப்பு பணம் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும். மேலும் தங்கள் பணிக்காலத்திற்கான ஓய்வூதியம் பெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பினால் தங்கள் கணக்கில் உள்ள தொகையை தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய கறுப்பு பண சட்டத்தின் படி வெளி நாட்டில் உள்ள சொத்து விவரங்களை வரும், 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்போருக்கு, 30 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்த, டிசம்பர், 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணம் விவரங்களை தெரிவிக்காமல் மறைப்போருக்கு, 90 சதவீத வரியும், 10 ஆண்டு கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க, கறுப்பு பணம் தடுப்பு புதிய சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.