October 24, 2021

வரும் ஜனவரியிலிருந்து 1 மணிநேர ஃப்ளைட் பயணத்திற்கு மினிமம் ரூ 2,500 மட்டுமே!

சராசரி மக்களும் வான் பயணம் மேற்கொள்ள 2-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறைந்த கட்டண விமான சேவையை மத்திய அரசு அறிமுகபடுத்த உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டப்படி ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், இத்திட்டத்திற்கு உடான் என பெயரிடப்பட்டுள்ள தாகக் கூறினார். அதாவது சாதாரண மக்களுக்கும் விமான பயணம் சாத்தியமாகும் என்பதை ஹிந்தியில் உணர்த்தும் விதமாக உடான் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் விமான சேவைகளை இயக்கும் நிறுவனங்கள் அது தொடர்பான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதாவது வழக்கமாக விமான சேவை உள்ள விமான நிலையங்கள் அல்லாது பிற பகுதிகளுக்கு இயக்கும் வகையில் இந்த விமான மார்க்கம் இருக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பங்களை மூன்று நாள்களுக்குள் அரசு பரிசீலிக்கும். இந்தத் திட்டம் முழுவதும் 10 வார காலத்துக்குள் முழுமை பெறும். இந்தத் திட்டத்துக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஒரு மணி நேரத்துக்குள்ளான விமான பயணத்துக்குக் கட்டணமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு முக்கிய விமான நிலையங்களில் குறைந்தபட்ச வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு குறித்த அறிவிப்பு இம்மாதம் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறைச் செயலர் ஆர்.என். சௌபே தெரிவித்துள்ளார்.