October 16, 2021

வரி ஏய்ப்பு கிரிமினல் குற்றமில்லை- சுவிட்சர்லாந்து அரசு அதிகாரி தகவல்!

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு, கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் அனைவரது பட்டியலையும் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இன்று காலை 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.அதில் 627 பேர் பெயர் பட்டியல் இடம் பெற்று இருந்தது. 3 ஆவணங்களாக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது ஆவணத்தில் 627 பேர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. 2–வது ஆவணத்தில் வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களும், 3–வது ஆவணத்தில் விசாரணை நிலவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில்”சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமனல் குற்றம் இல்லை. எனவே தான் பணம் பதுக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில், வரி ஏய்ப்பு தொடர்பாக, இந்தியாவின் கோரிக்கையை எங்களால் உடனடியாக ஏற்க முடியாமல் இருந்தது.” .என்று விட்சர்லாந்து வெளி விவகார இலாகாவின் இயக்குனரும், சட்ட ஆலோசகருமான வாலென்டின் ஷெல்வேகர் தெரிவித்துள்ளார்.
black money oct 29
இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒருபகுதியாக வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 3 தொழிலதிபர்களின் பெயர்களை இந்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று மேலும் பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர்,”கருப்புப் பண விவகாரத்தில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை வரிஏய்ப்பு கிரிமினல் குற்றம் அல்ல. ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ நடைமுறை விதிகளை சுவிட்சர்லாந்து வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்றுகின்றன. எனவே வரிஏய்ப்பு தொடர்பாக சுவிட்சர்லாந்தை அணுகும்போது நாங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை விரைவாக அளிக்கிறோம்.

பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை கோரும்போது நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். துனிசியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று விரைவாக செயல்பட்டிருக்கிறோம்.

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக இந்திய அரசுடன் மிக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்று அவர் தெரிவித்தார்.