September 17, 2021

வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 37 சதவீத (சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீட்டர்) பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, மிக அவசியமான ஒன்று என்கிற அதே வேளையில், அந்த உத்தரவு எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது.
dec 5 - edit forest
அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களுக்குப் புகலிடமாகத் திகழ்வதில், உலகிலேயே இரண்டாவது முக்கியத்துவமான பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை. அதில் இயற்கைச் செழுமைமிக்க பகுதிகளை, மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு கண்டறிந்து, அப்பகுதிகளில் சுரங்கங்கள், கல்குவாரிகள், மணல் குவாரிகள், அனல் மின் நிலையங்கள், அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குத் தடைவிதித்துள்ளது. இக்குழு அடையாளம் கண்டுள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், உலகப் பாரம்பரிய இடங்கள், புலிகள் மற்றும் யானைகள் வசிப்பிடங்கள் ஆகியவையும் அடங்கும்.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் அடர்ந்து பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளம் வேகமாக அழிந்துவருவதைத் தடுக்க இந்த உத்தரவு எந்த அளவு உதவிடும் என்பது, அதை அமல்படுத்தும் முறையில்தான் இருக்கிறது.

அண்மையில், இந்தியா முழுவதும் புலிகள் சரணாலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவால் சுற்றுலா மூலமான வருவாய் இழப்பைக் காரணம்காட்டி மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகின.

இதைத்தொடர்ந்து, புலிகள் சரணாலயத்துக்குள்பட்ட எந்தெந்தப் பகுதிகளில் சுற்றுலாவை அனுமதிக்கலாம் என மாநில அரசுகள் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டது. இப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன்னர், புலிகள் காப்பகப் பகுதியில் என்ன நிலை இருந்ததோ, அந்த நிலையே அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது. புலிகளின் நலன் கருதி ஒரு இடத்திலாவது சுற்றுலாவுக்குத் தடைவிதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

அதே கதி, இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.

குஜராத் முதல் தமிழ்நாடு வரை 1,64,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 24.8 சதவீத வனப்பகுதியே தூய்மையானதாக, ஆக்கிரமிப்புக்குள்ளாகாத இடமாக இருக்கிறது. மற்ற இடங்கள், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அனுமதித்ததால் அழிக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. சுரங்க குத்தகைகளுக்கு அனுமதி அளித்தல், அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்துதல், சாலை, ரயில் போக்குவரத்துக்காக மலைகளைக் குடைதல் என வனப்பகுதி சூறையாடப்படுகிறது. இதனால் வனவளம் குறைந்து, ஆறுகளின் போக்கே வழிமாறிப் போவதும், மழை குறைவதும், வன உயிரினங்கள் அழிவுக்குள்ளாவதும் நடக்கின்றன. இவை குறித்து எந்த அரசும் சிறிதளவும் கவலைகொள்ளாததுதான் வேதனைக்குரிய விஷயம். அரசின் அனுமதியுடன் நடைபெறும் இவை ஒரு பக்கம் என்றால், சட்டவிரோதமாக அரசியல் செல்வாக்குடன் கல் குவாரிகள், சுரங்கங்களும் பல இடங்களில் இயங்குகின்றன.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவு, எந்த சமரசத்துக்கும் இடம் தராமல் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மழைவளம் தந்து நம்மை காக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை நாம் காக்க முடியும்.

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கு மலையோர, வனப்பகுதி மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கேரளத்தில் கோட்டயம், கண்ணூர் மாவட்டங்களில் தாங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், அரசு பஸ்கள் மீது தாக்குதல், வனத்துறை அலுவலகத்துக்கு தீவைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் கேரளத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என அஞ்சுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

பழங்குடிகளுடன் இணைந்த வனப் பாதுகாப்பே பயன்தரும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களது அச்சத்தைப் போக்கி, வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

எஸ். ராஜாராம்