October 21, 2021

வடகிழக்கு பருவமழை தொடங்கியது! + இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும். ஆனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிக மழையை கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 32 செ.மீ. மழை மட்டுமே சராசரியாக பெய்கிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 31 செ.மீ.மழை பெய்துள்ளது. இது சராசரி அளவாகும்.வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ.மழை பெய்யவேண்டும். அதுவும் அக்டோபர் மாதம் 20-ந்தேதி அளவில் சராசரியாக பெய்யத்தொடங்கும். எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தனர். அதன்படி தமிழ்நாட்டில் நேற்று தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
weather oct 18
மேலும் தற்போதைய வானிலை குறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன்,”இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டிய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.”என்று தெரிவித்தார்.