September 27, 2021

வங்கி ஊழியர்களுக்கு இன்கிரிமெண்ட் + சனிக் கிழமை லீவு + ஃபேமிலி மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லாம் கிடைச்சாச்சு

வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அவர்களது கடந்த சம்பள விகிதம், 2012-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. புதிய சம்பள விகிதம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 30 மாத இழுபறிக்கு பிறகு, சில வாரங்களுக்கு முன்பு உடன்பாடு ஏற்பட்டது. 15 சதவீத சம்பள உயர்வும், மாதத்தில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
bank 26
இந்நிலையில், இந்த உடன்பாடு நேற்று முறைப்படி கையெழுத்தானது. வங்கி நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியிட்டு சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், பொதுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள் மற்றும் சில வெளிநாட்டு வங்கிகள் என 43 வங்கிகளில் பணியாற்றும் சுமார் 10 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும் பலன் அடைவார்கள்.

இதுகுறித்து, வங்கி நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.பாசின் நேற்று மும்பையில் நிருபர்களிடம்,”15 சதவீத சம்பள உயர்வு மற்றும் இதர படிகள் மூலம், வங்கிகளுக்கு ஓராண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 725 கோடி கூடுதல் செலவாகும். ஓய்வூதிய செலவையும் சேர்த்தால், இந்த கூடுதல் செலவு ரூ.8 ஆயிரத்து 370 கோடியாக உயரும்.

ஒர்க்மென் என்ற பிரிவினருக்கு சம்பள உயர்வு நிலுவைத்தொகை (அரியர்) உடனடியாக வழங்கப்படும். அதிகாரிகளுக்கான நிலுவைத்தொகை 4 முதல் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும்.

மாதத்தில், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். விடுமுறையை அமல்படுத்த மூன்று, நான்கு வாரங்கள் ஆகும்.

தற்போது, வங்கி ஊழியர்களுக்கான ஆஸ்பத்திரி செலவுகள், செலவழித்து விட்டு திரும்பப்பெறும் முறையில் அந்தந்த வங்கி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கத்தில் இணைந்த வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒட்டுமொத்தமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்” என்று அவர் கூறினார்.