September 27, 2021

வங்கியில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யும் நபர்களின் சொத்துக்கள் உடனடி பறிமுதல்!

நம் நாட்டில் வங்கிகளின் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது வாராக்கடனும், வங்கிக்கடன் மோசடியுமாகும். ஒவ்வொரு நிதி ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளை வாராக்கடனில் சேர்ப்பதால், இழப்பீடு என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசியல் கட்சிகளோடு தொடர்புடைய பெருநிறுவனங்கள், செல்வாக்கு மிக்க தனிமனிதர்கள் வாங்கும் கடனை வசூலிக்க முடியாமல் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடனில் நிலுவையாக இருக்கின்றன. இதுவரை வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.5லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், வங்கிகளின் செயல்பாடு என்பது பெரும் சிக்கலையும், அதை நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவில் கடன் கொடுக்க முடியாத சூழலும் இருந்து வருகிறது.

இதனிடையே 100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் மோசடி செய்யும் நபர்களின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மசோதாவின் மூலம் வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியோ அல்லது மோசடி செய்தோ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றவர்களின் சொத்துக்களை உடனே பறிமுதல் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சாக்ஸி ஆகியோர் வங்கிகளில் 1000 கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்துவிட்டு,கடன் பெற்ற வங்கிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.