September 29, 2021

வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் நாகை அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.இது தமிழகத்தை நெருங்கி வருவதால், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
nov 19 - weather
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,”மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதியிலும் மழை பெய்யும்.கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சங்கராபுரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல் புதுவை துறைமுகத்திலும் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மேலும் கடலூரிலும், புதுவையிலும் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் அதிக வேகமாக வீசுகின்றன.