June 13, 2021

வக்கீல்களுக்கு திருமண சந்தையில் நோ வேல்யூ ! -சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் பேச்சு

அகில இந்திய பார் கவுன்சிலர் தலைவர் எம்.கே.மிஸ்ரா அண்மையில் கூட, “இந்தியாவில் உள்ள வக்கீல்களில் 30 சதவீதம் பேர் போலி வக்கீல்கள். போலி பட்டத்தை வைத்துக் கொண்டு கோர்ட்டுகளில் வாதாடி வருகிறார்கள்.பார் கவுன்சில் கணக்கெடுப்பின்படி 20 சதவீத வக்கீல்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து வக்கீல்களாக பதிவு செய்து வழக்குகளில் ஆஜராகி வாதாடுகிறார்கள்.மீதமுள்ள 10 சதவீதம் பேர் சட்டமே படிக்காமல் பார் கவுன்சிலில் பதிவும் செய்யாமல் வக்கீலாக பணியாற்றி வருகின்றனர். வக்கீலாக பதிவு செய்பவர்களில் சிலர் வக்கீல் தொழில் செய்யாமல் தங்களது சொந்த தொழில்களை செய்து வருகின்றனர். இதனால்தான் இந்த புனிதமான தொழிலுக்கு உள்ள மரியாதை பாதிக்கப் பட்டுள்ளது”என்று தெரிவித்திருந்தார்
Advocate-s-dress


இதனிடையே டெல்லியில் நடந்த இந்திய வக்கீல்கள் சங்க கருத்தரங்கத்தில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் சி.எஸ்.தாக்குர் பேசும்போது,”வக்கீல் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் சுமார் 20 லட்சம் வக்கீல்கள் இருக்கிறார்கள் என்று கூறப் படுகிறது. ஒருவர் வக்கீல் ஆகக்கூடாது என்று நாம் யாரையும் தடுக்க முடியாது. ஒருவர் பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர் வக்கீலாக முடியும் என்று பொதுவாக கூறுவதை பொய்யாக்கும் வகை யில் வக்கீல் தொழிலின் தரத்தை உயர்த்த வேண்டும்.குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் குமாஸ்தாவாக பணி புரியட்டும். அல்லது வேறு ஏதாவது பணியை தேர்ந்தெடுக்கட்டும். யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருவருக்கான இடமாக வக்கீல்கள் சங்கம் ஏன் இருக்க வேண்டும்?

திருமண சந்தையிலும் வக்கீல்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது. உங்கள் மகன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிறானா? சரி. ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். ஆக இருக்கிறானா சரி என்கின்றனர். ஆனால் வக்கீலாக இருக்கிறான் என்றால் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். வக்கீல்களுக்கு திருமண சந்தையில் மதிப்பு கிடையாது.வக்கீல்கள் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும். இந்த தொழிலுக்கு ஒருவர் வரவேண்டும் என்றால் அது மிகவும் கடினமானதாக இருக்க வேண்டும். அப்போது திருமண சந்தையில் வக்கீல்களின் மதிப்பு கண்டிப்பாக கூடும்.

தரமற்ற சட்டக்கல்லூரிகள் தரமற்ற வக்கீல்களை உருவாக்குகின்றன. தேவையான அளவில் ஆசிரியர்கள் இல்லாத சட்டக்கல்லூரிகள் இருக்கலாம். நூலகங்கள் இல்லாத சட்டக்கல்லூரிகள் அல்லது மாணவர்களின் வருகையை பதிவு கூட செய்யாத சட்டக்கல்லூரிகளும் இருக்கலாம். வெறும் கல்லூரி கட்டணத்தொகையை மட்டும் நீங்கள் கட்டினால் போதும். மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வக்கீல் தொழிலில் இருப்பவர்களோ அல்லது நீங்களோ இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? இந்த சட்டக்கல்லூரி கடைகளை மூடச்செய்வது இந்திய வக்கீல்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் மாபெரும் பொறுப்பாகும். வக்கீல் தொழிலுக்கு இழுக்கு தேடித்தருபவர்களை நீக்குவது என்பது உங்களுக்கு முன்பாக உள்ள சவால் ஆகும்.

வக்கீல் சங்கத்தில் உள்ள தேவையற்ற அல்லது தொழில் திறமையற்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்துவது அல்லது அவர்களை நீக்குவதும் சங்கத்துக்கான சவால் ஆகும். வக்கீல் சங்கம் தன்னுடைய தூய்மையை காத்துக்கொள்ள அதுபோன்ற உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களை நீக்கவேண்டும்.

வக்கீல்கள், தொழிலில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம். ஒழுங்கு தவறும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரமான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்கவேண்டும்”என்று தெரிவித்தார்.