September 21, 2021

லல்லு மகள் ஓட்டுப்பதிவு எந்திரத்தை நொறுக்கினார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை?

ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். 39 வயதாகும் மிசாபாரதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.மிசாபாரதி நிற்கும் பாடலி புத்ரா தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து வேட்பாளர் என்ற முறையில் மிசாபாரதி தொகுதி முழுவதும் சுற்றி வந்து ஓட்டுச்சாவடிகளுக்குள் சென்று ஓட்டுப்பதிவை பார்வையிட்டார்.ஒரு ஓட்டுச்சாவடிக்குள் சென்று அவர் பார்வையிட்ட போது மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததை கண்டு பிடித்தார். இது தொடர்பாக அவர் அந்த ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
lalu daughter misa_
அதிகாரிகளுடன் மோதல் முற்றியதால் கடும் ஆத்திரம் அடைந்த மிசாபாரதி மின்னணு எந்திரத்தை அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தை ஓட்டு போட வந்த ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.மிசாபாரதியின் செயல் பற்றி அந்த ஓட்டுச் சாவடி அதிகாரி மேல் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த ஓட்டுச் சாவடிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மிசா பாரதி அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.இதுபற்றி மிசாபாரதியிடம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அப்போது ‘‘அவர், நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என்றார்.