April 2, 2023

லடாக் விவகாரம் : மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம்!

லடாக் பகுதியில் சீனாஉடனான எல்லைப்பிரச்னையில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்து கட்சி தலைவர்கள் கூறினார். கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் இந்தியா சீனா படைகளை குவித்து வந்தது. இதனிடேயே கடந்த 15 ம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியதரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விவாதம் நடதத் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கட்சி தலைவர் சோனியா, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, தமிழகத்தில் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டதில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, சரத் பவார், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மலைப் பகுதியில் தற்போதைய நிலைமை என்று கேள்வி எழுப்பியதுடன், எதிர்க்கட்சிகளுக்குத் தொடர்ந்து நிலவரம் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“எல்லைப் பகுதி பதற்றத்தைத் தணிப்பதற்கான அனைத்து வழிவகைகளிலும் நாம் தோற்றுவிட்டோம், மதிப்புமிக்க நேரத்தை இழந்துவிட்டோம், விளைவு 20 உயிர்களின் இழப்பு” என்று குறிப்பிட்ட சோனியா, இது நமது உளவு அமைப்பின் தோல்வியா என்றும் வினவினார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், நாம் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,எனினும் சீனா நுழைவதை அனுமதித்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நம்முடைய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தார்களா, இல்லையா என்பது பற்றிக் குறிப்பிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார், இவையெல்லாம் சர்வதேச உடன்பாடுகளால் முடிவு செய்யப்படுகின்றன, இதுபோன்ற சிக்கலான தருணங்களில் அவற்றை மதிக்க வேண்டும் என்றார்.

நாடு முழுவதும் சீனாவின் மீது கோபம் கொண்டிருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டார்.