October 16, 2021

“லஞ்ச வரி கொண்டு வரலாம்!” – முன்னாள் அதிமுக எக்ஸ் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பகீர்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா எம்.எல்.ஏ. (துறைமுகம் தொகுதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் நீக்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருக்கிறது. என்னை கட்சியை விட்டு விலக்கும் அளவுக்கு பெரிய தவறு செய்யவில்லை. ‘துக்ளக்’ விழாவில் இன்றைய அரசியல் பற்றி பேசினேன். இன்றைய அரசியல் நன்றாக இல்லை. நான் எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த 5 ஆண்டு கால ஆட்சி எனக்கு பிடிக்கவில்லை. கட்சி நடத்தும் பாங்கு வேறு. நான் வளர்ந்த விதம் வேறு. அ.தி.மு.க.வில் இருந்தபோது நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
pazha karu
ஆளும் கட்சியினரை அதிகாரிகள் தான் நெருங்க முடிகிறது. நாங்கள் நெருங்க முடியாது. சட்ட மன்றத்தில் தான் நாங்கள் பேச முடியாது என்றால், பொதுக்குழு கூட்டத்தில் கூட பேச அனுமதிப்ப தில்லை. முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களை சந்தித்து கூறலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை. இப்போது, என்னை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். எனவே, எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரை சந்தித்து கொடுக்கலாம் என்று சென்றேன். ஆனால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சட்டசபை செயலாளரை சந்தித்து கொடுக்கலாம் என்றால் அவரை பார்க்கவே முடியவில்லை. மனதளவில் ராஜினாமா செய்துவிட்டேன்.

எதிர் கட்சியாக இருந்து நாம் எதற்காக போராடினோமோ, அதை ஆளும் கட்சியாக இருந்து நிறை வேற்றலாம். அந்த அடிப்படையில் தான் எம்.எல்.ஏ.வாக வந்தேன். ஆனால், அது முடியவில்லை. அதனால், ஏற்கனவே பலமுறை ராஜினாமா செய்ய நினைத்தேன். சட்டம் என்பது சட்டமாக இருக்க வேண்டும். கட்சிக்காகவோ, தனி மனிதனின் விருப்பத்தின்படியோ இருக்க கூடாது. ஹெலிகாப்டரை பார்த்து அமைச்சர்கள் குனிந்து கும்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு சாதாரண கவுன்சிலருக்கு கூட ரூ.5 லட்சம் வரை கொடுத்தால் தான் வீடு கட்ட முடியும். இது நல்ல முறை அல்ல. இதை, லஞ்ச வரி என்று கொண்டுவந்தால் தான் முறைப்படுத்த முடியும்.

கீழ்மட்ட அரசு அதிகாரிகளுடன் கவுன்சிலர்களும், மேல்மட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் களும் கூட்டு வைத்திருக்கிறார்கள். அதிகாரிகளும், ஆட்சியாளர் களும் கைகோர்த்தால் நாடு சூறை யாடப்பட்டு விடும். நான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். நாட்டில் மதுவை ஒழியுங்கள். 3-ல் ஒரு பங்கு வருவாய் அரசுக்கு மதுவில் இருந்து வருவது ஏற்புடையதல்ல. அது ஏழைகள் பணம்.இளைஞர்களே மதுவுக்கு அடிமையாவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.சிகரெட் விற்பனையை குறைத்தது போல், மதுவை ஒழிக்கவும் அரசால் முடியும். இந்த ஆட்சியின் இறுதி கட்டத்திலாவது மதுவுக்கு தடை கொண்டுவந்தால், அது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரை கொடுக்கும். நாட்டில் மதுக்கடைகளை திறந்த கருணாநிதியே இன்று மதுவை ஒழிப்போம் என்கிறார். அதனால், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவால் வரும் வருவாய் இழப்பை சரிகட்டுவது குறித்து பின்னர் யோசிக்கலாம். ஏழைகளிடம் பணத்தை வாங்கி, அவர்களுக்கே இலவசங்கள் கொடுப்பது சரியானது அல்ல.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று துறைமுகம் எம்.எல்.ஏ.வாக நான் வந்தாலும்,ஒரு எம்.எல்.ஏ. வாக நான் தோற்றுவிட்டேன். எதற்கும் பணம் தான் சிபாரிசாகிவிட்டது. எனது தொகுதி யில் முஸ்லிம் மக்கள் அதிகம். அவர்களிடம் தேர்தலின்போது நான் சில வாக்குறுதிகளை அளித்து வாக்கு கேட்டேன். 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த அவர் களுக்கு, நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. எனவே, தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்து, பொதுத் தொண்டு செய்யவும், அரசியலில் தொடரவும், எழுதவும் விரும்புகிறேன். இந்த நாட்டில் எதிர் கருத்து சொல்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிர்நிலை கருத்தால் தான் ஆட்சியாளர்கள் வளர முடியும்” இவ்வாறு பழ.கருப்பையா கூறினார்.