September 20, 2021

ரைட்.. ரைட் திரைப்படங்கள் ரிலீஸாக கிரீன் லைட்! – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்துக்கு சில வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். ‘லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ.12.5 கோடி நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ‘லிங்கா’ படவினியோகஸ்தர்களுக்கு அதில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு ரூ.2¾ கோடி இன்னும் தரப்படவில்லை என்று புகார் கூறினர். நஷ்டஈடு தந்தால்தான் விஷால் நடித்த ‘பாயும்புலி’ படத்தை வெளியிடுவோம் என்று நிபந்தனையும் விதித்தனர். ‘லிங்கா’ படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் பட நிறுவனம்தான் ‘பாயும்புலி’ படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
700 12
தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கைக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு ‘பாயும்புலி’ படம் வெளி யாகவிடாமல் தடுக்கிறார் என்று குற்றம் சாட்டினர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் ‘பாயும்புலி’ உள்பட அனைத்து படங்களை யும் 4-ந் தேதி (இன்று) முதல் திரையிடமாட்டோம் என்று அறிவித்தனர். 11-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என்றும் கூறினர்.

இதையொட்டி திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நேற்று அவசரமாக கூடியது. இதில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் சிவா, வினியோகஸ்தர்கள் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம், செல்வின்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத்தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள். “திரையுலக சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று, ‘பாயும்புலி’ உள்பட அனைத்து படங்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட முடிவு செய்துள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘பாயும்புலி’ படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தால், அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து திரைப்பட கூட்டமைப்பில் முடிவு செய்யப்படும்.

‘லிங்கா’ படத்துக்கு நஷ்டஈடாக கொடுக்கப்பட்ட தொகை முழுவதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி தொகையை அடுத்த வாரம் தந்து விடுவதாக ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். சிறுபட தயாரிப்பாளர்கள் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எங்கள் சங்கத்தை உடைப்பதாக பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இதன் மூலம் படஅதிபர்கள் சங்கத்துக்கு எதிராக அவர் செயல்பட்டு வந்தது நிரூபணம் ஆகியுள்ளது. அக்டோபர் 23-ந் தேதி தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்”என்று அவர்கள் கூறினார்கள்.

முன்னதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் அதன் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “பாயும்புலி’’ படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடைவிதிக்கவில்லை. செங்கல்பட்டு பகுதியில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கான ‘லிங்கா’ பட நஷ்டஈடு தொகை ரூ.2¾ கோடி வரவில்லை என்று சில முடிவு எடுத்துள்ளார்கள். அதற்கும், சங்கத்துக்கும் தொடர்பு இல்லை. ரஜினிகாந்த் கொடுத்த நஷ்டஈடு பணத்தை முழுவதுமாக திருப்பி தரவில்லை. அதை வாங்கியே தீருவோம். தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணுவை நான் மிரட்டவில்லை. அவர்தான் என்னை மிரட்டினார். தாணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா புதிய படங்களையும் நாங்கள் திரையிடுவோம்”என்றார்.

மேலும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நேற்று சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமாரை சந்தித்து, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தாணு, தன்னை மிரட்டுவதாக கூறியிருந்தார்.