October 20, 2021

ரெயிலில் தீ வைத்து எரிக்கப் பட்ட பெண் யார்?போலீஸ் விசாரணை!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் பெட்டியில் அடையாளம் தெரியாத நபரால் ஒரு பெண் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் 45 சதவீத தீக்காயங்களுடன் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அந்த பெண் மீது சாராயம் ஊற்றி தீ வைக்கப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
kerala girl train
கண்ணூர் ரெயில் நிலையத்தில் இந்த கோரச் சம்பவம் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு நடந்துள்ளது. ரெயில் நிலையத்தில் வந்து நின்ற காலியாக இருந்த ரெயில் பெட்டியில் இருந்து உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பெண் ஒருவர் அலறியடித்து ஓடினார். அப்போது ரெயில் ஏறுவதற்காக அங்கு வந்திருந்த பயணிகள் அதனை பார்த்து பதறிப் போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் கோழிகோடு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் பாத்திமா என்றும் அவர் மலப்புரத்தை அடுத்த கிடங்கலூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. பாத்திமா இறப்பதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே வாலிபர் பெண்ணை தீ வைத்து எரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தை அடுத்து அந்த வாலிபர் நைசாக தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? பாத்திமாவுடன் அவருக்கு என்ன தொடர்பு? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருவருக்கும் இடையே பணம் கொடுத்து வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.