October 21, 2021

”ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர்.” -சென்னையில் ப. சிதம்பரத்தை சீண்டிய மோடி!

“மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர். அவர் வாக்கு எண்ணிக்கையில் தோற்றார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தார். இதற்கிடையில் குஜராத்தில் நுழைய காங்கிரசுக்கு 25 ஆண்டுகளாக அனுமதியில்லை. அதே நிலை நாடு முழுவதிலும் ஏற்படும். மத்திய அரசின் மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி, அகங்காரத்தின் உச்சம். அவர் எங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வீசுகிறார். நாங்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம், சேறு எவ்வளவு தூரம் வருகிறதோ அதை தாண்டி தாமரை வளரும். என் பொருளாதார அறிவை ஸ்டாம்பின் பின்புறம் எழுதிவிடலாம் என்று கூறியுள்ளார். ஸ்டாம்பை ஒட்டினால்தான் தபால் ஒழுங்காக போய்ச் சேரும் என்று நான் அவருக்கு கூறிக்கொள்கிறேன். அவர் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் நான் ‘ஹார்டு ஒர்க்கால்’ (கடின உழைப்பால்) வளர்ந்தவன்.”என்று சென்னை கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடுமையாக சாடிப் பேசினார்.
modi-in chennai
பாஜ பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தமிழகத்திற்கு ஏற்கனவே 2 முறை வந்து பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக பாஜ சார்பில் ‘சென்னையில் மோடி’ என்ற தலைப்பில் மாநாடு போல் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொது கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரச்சாரத்தை முடித்து கொண்ட நரேந்திர மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 7.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

அவருக்கு தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், தமிழக பாஜ தலைவர் பொன்ராதா கிருஷ்ணன், தேசிய செயற்குழு தலைவர் இல.கணேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் பாஜக சார்பில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை முடித்த பின் காரில் மேடைக்கு மோடி வந்தார். தமிழக பாஜ தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி இரவு 8.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.’தமிழ்த் தாய்க்கு என் வணக்கம். தமிழ் மண்ணே வணக்கம். தமிழ் நண்பர்களே வணக்கம்’ என்று அவர் தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார். பின்னர், இந்தியில் பேசினார். அவரது பேச்சை மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.

மோடி தன் உரையில்,”குஜராத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு மணிப்பூர் இம்பாலில் நடந்த கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து அஸ்ஸாம் கவுஹாத்தியில் நடந்த கூட்டத்தில் கலந்துவிட்டு இப்போது சென்னைக்கு வந்துள்ளேன்.2014ம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருடைய ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று இந்த கூட்டத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்துவிடும். மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சாட்சியாகும். தேசத்தின் நன்மைக்காக நல்ல ஆட்சியைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் இதுவரை இதுபோன்ற சங்கடமான நிலைகளை மக்கள் சந்தித்ததில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நமது நாட்டை சீரழித்து விட்டது. யாருக்காக அரசு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. பணக்காரர்களுக்காகவா, கோடீஸ்வரர்களுக்காகவா இந்த அரசு. மக்கள் பதில் கூறுவார்கள். பணக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தால் உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் வாங்கி விடமுடியும்.

அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் வசதியான அதிக செலவிலான டாக்டரிடம் சிகிச்சை பெற முடியும். தங்களுக்கு தேவையான பள்ளி, கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும். ஆனால், ஏழைகள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்குத்தான் போக முடியும். அவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க முடியும். ஆனால், அதையும் காங்கிரஸ் அரசு கெடுத்து வைத்துள்ளது. எனவேதான் அரசு என்பது ஏழைகளுக்கான அரசாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால், டெல்லியில் உள்ள அரசில் இருப்பவர்கள் ஏழைகள் பற்றி பேசுகிறார்களா. அவர்கள் தேர்தல் வரும்போதுதான் ஏழைகள், ஏழைகள் என்று சத்தம் போடுவார்கள், பிரசாரம் செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ன சொல்கிறார். ஏழை என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்தது என்று கூறுகிறார். ஏழைகளுக்கு எதிரான அரசுதான் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த அரசுக்கு ஏழைகள் மீது அக்கறை இல்லை. இருந்திருந்தால் தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுவார்களா. தமிழக மீனவர்களுக்கு ஏன் இந்த சிக்கல். காரணம் ஏழைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. இப்போது, தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளிலும் வாடுகிறார்கள். நம் நாட்டுக்கு அண்டையில் இருக்கும் குட்டி நாடுகள் நமக்கு தொடர்ந்து தொந்தரவும், தொல்லையும் தந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் உலக நாடுகள் இந்தியாவை ஏளனமாகப் பார்ப்பதுடன் இந்தியாவின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பு காங்கிரஸ் அரசுக்குத்தான் உள்ளது. இந்தியாவைச் சுற்றி நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகியவை தொடர்ந்து பிரச்னைகளையும், தொல்லைகளையும் தந்து வருகின்றன. சீனா நம்மை தொடர்ந்து சீண்டிப்பார்த்து வருகிறது. ஆனால், இந்திய அரசு அமைதியாக உள்ளது. இந்த துர்பாக்கிய நிலை காங்கிரஸ் அரசால்தான் வந்தது. மத்திய அரசுதான் இதற்கு காரணம். நமது நாடு அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவை வைக்க வேண்டும். அதற்கு டெல்லியில் உள்ள அரசு பலமான, வலிமையான அரசாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அண்டை நாடுகள் தானாக வந்து நம்முடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கொள்ளும்.

ஆனால், நாட்டை இந்த காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டார்கள். அண்டை நாடுகளுடன் உள்ள உறவைக் கெடுத்து வைத்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு பலவீனமடைந்துள்ளன. உலக அரங்கில் இந்தியா மிகப்பெரிய நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டம் உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து நிலைகளும் சீரழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத நிலை ஏற்பட்டு உலக அரங்கில் இந்தியா நொறுங்கிய நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசில் மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. எல்லா அதிகாரங்களும் காங்கிரஸ் அலுவலத்தின் பிடிக்கு சென்று விட்டது.
modi-in chennai.2
அனைத்து ஆளுநர் அலுவலகங்களும் காங்கிரஸ் அலுவலகங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. சட்ட மன்றங்கள் சட்டத்தை இயற்றினால் அதில் கையெழுத்துபோடக் கூட ஆளுநர்கள் தயங்குகிறார்கள். இப்படி இருந்தால் மாநில அரசுகள் எப்படி முன்னேற்றம் அடைய முடியும். எனது குஜராத் மாநிலத்துக்கு ஏராளமான தொழிலதிபர்கள் முதலீடுகளைச் செய்ய வந்தார்கள். ஆனால், மத்தியில் ஆளும் அரசு தனது அதிகாரத்தில் உள்ள வருமான வரித்துறையின் துணை கொண்டு முதலீடு செய்ய வருபவர்களுக்கு வருமானவரி நோட்டீஸ் அனுப்பி அவர்களை குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் தடுத்து விட்டார்கள்.மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர். அவர் வாக்கு எண்ணிக்கையில் தோற்றார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தார். இதற்கிடையில் குஜராத்தில் நுழைய காங்கிரசுக்கு 25 ஆண்டுகளாக அனுமதியில்லை. அதே நிலை நாடு முழுவதிலும் ஏற்படும். மத்திய அரசின் மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி, அகங்காரத்தின் உச்சம். அவர் எங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வீசுகிறார். நாங்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம், சேறு எவ்வளவு தூரம் வருகிறதோ அதை தாண்டி தாமரை வளரும். என் பொருளாதார அறிவை ஸ்டாம்பின் பின்புறம் எழுதிவிடலாம் என்று கூறியுள்ளார். ஸ்டாம்பை ஒட்டினால்தான் தபால் ஒழுங்காக போய்ச் சேரும் என்று நான் அவருக்கு கூறிக்கொள்கிறேன். அவர் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் நான் ‘ஹார்டு ஒர்க்கால்’ (கடின உழைப்பால்) வளர்ந்தவன்.”என்று அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். இன்று காலை 9.30மணிக்கு எஸ்ஆர்.எம் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து காலை 11.45 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் வந்து தனி விமான மூலம் கேரளா மாநில கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்த பொது கூட்டத்தில் மதிமுக துணை பொதுசெயலர் மல்லை சத்யா, ஐஜேக., தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம், இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன், பாஜ சார்பில் தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, பொதுச்செயலர் மோகன் ராஜீலு, துணை தலைவர் சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.