October 19, 2021

‘‘ரிமோட்டை கீழே போட்டுவிட்டு போய் ஓட்டுப்போடு” -டி.வி.யில் தேர்தல் கமிஷன் நினைவூட்டல்

கண்ணியமான தேர்தல் என்ற பிரசார தொடக்க நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவிகளிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசியதாவது;- “எல்லா இளைஞர்களும் பேஸ்புக்கில் இணைந்திருப்பீர்கள் என்று நம்பி தேர்தல் அலுவலகம் சார்பில் அதில் இணைந்திருக் கிறோம். வாக்காளர் பட்டியலில் அதிக மாணவிகள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் தேர்தலுக்கு மிக முக்கியமானவர்கள் இளையவர்கள்தான்.
election jan 9
பெயர் பதிவு செய்திருந்தாலும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை 1950 என்ற எண் மூலம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வாக்காளர் அடையாள அட்டையின் நம்பரை அதில் குறிப் பிட்டால் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பதிலுக்கு வரும் எஸ்.எம். எஸ். ஐ பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.இணைய தளத்திலும் அதை சரிபார்க்கலாம். கல்லூரி களில் இதற்கென்று ஒரு நாளை நியமித்து, தேர்தல் கமிஷனின் இணைய தளத்துக்குச் சென்று அனைத்து மாணவிகளும் இதை சரிபார்ப்பதோடு, இதுவரை பெயர்ப் பதிவு செய்யாதவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே பெயர்ப் பதிவு செய்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதுபோல 73 சதவீத வாக்காளர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கின்றனர். எனவே பெற்றோரையும் வாக்களிப்பதற்கு மாணவ-மாணவிகள்தான் வற்புறுத்த வேண்டும். இனி நாங்கள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், பேஸ்புக் மூலமாகவும், டி.வி. மூலமாகவும் வாக்களிப்பதை நினைவூட்ட இருக்கிறோம். ‘‘ரிமோட்டை கீழே போட்டுவிட்டு, போய் ஓட்டுப்போடு‘‘ என்று டி.வி.யில் ஸ்லோகன் போட இருக்கிறோம்.வாக்குப்பதிவு அன்று இதற்காக அரை மணிநேரம் குடும்பமாக செலவழியுங்கள். அருகில் வசிப்பவர்களிடமும் வாக்களிக்க வற்புறுத்துங்கள். மாணவ, மாணவிகள் தானாக முன்வந்து மக்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். நீங்கள்தான் மக்களுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் இடையே யான தூதராக செயல்பட வேண்டும்.தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே இருந்தாலும், நீங்களே தலைமைத் தேர்தல் அதிகாரி போல செயல்பட்டால் எங்களால் தேர்தலை நேர்மையாக நடத்த முடியும்.

பெயர் சரிபார்த்தலுக்கு 1950, 9444123456 ஆகிய தேர்தல் கமிஷன் எண்களை மறக்காதீர்கள். எனது செல்போன் எண் 9840433055. உங்கள் புகார்களை எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம் தெரிவியுங்கள். தேர்தல் முறைகேடு தெரிந்தால் உடனே புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள்.நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதை உறுதி செய்யுங்கள். வாக்காளர் அடையாள அட்டையுடன் மாணவி கள் செல்பி எடுத்து அனுப்பினால், நல்ல செல்பிக்கு பரிசு வழங்கப்படும்”இவ்வாறு அவர் பேசினார்.

அறிவியல் நகர துணைத் தலைவர் யு.சகாயம் பேசியதாவது:-:”மாணவ, மாணவிகள்தான் தேசத்தின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். தேர்தலை கண்ணியமாக நடத்தும் புரட்சி மாணவிகளிடம் இருந்து தொடங்கிஇருக்கிறது. இந்தியாவில் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஜனநாயகத்தின் அடிப்படை என்பது நேர்மையான தேர்தல்தான். 2011-ம் ஆண்டில் மதுரை கலெக்டராக என்னை தேர்தல் கமிஷன் நியமித்திருந்தது. பணநாயகத்தை வீழ்த்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்று எல்லாரும் அச்சு றுத்தினார்கள். தேர்தல் நடத்த 19 நாட்களே இருந்த சூழ்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக அரிமா சங்கம், வர்த்தக கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங் களை அணுகினேன். யாருமே வரவில்லை. இப்போது நான் திருமங்கலத்தைப் பற்றி பேசவில்லை. எனவே மாற்றம் கொண்டுவரக்கூடிய மகத்தான சக்தியான மாணவர்களை அணுகினேன். நேர்மையும் பொறுப்பும் உள்ள சமூகமாக இருந்தால்தான் அதுபோன்ற தலைவர்களை உருவாக்க முடியும். பணம் வாங்கி ஓட்டுபோடக் கூடாது என்பதை நீங்கள் பின்பற்றுவது மட்டுமல்ல பெற்றோர்களிடமும் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.

எனது செல்போனை மாணவரிடம் கொடுத்து, மேடையில் இருந்தபடியே பெற்றோரிடம் பேசச் சொன்னேன். கட்டாயம் ஓட்டுபோட வேண்டும், பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் என்று பெற்றோரிடம் பேசினர். இந்த முயற்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.19 நாட்களில் எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த முறையும் அதுபோன்றே தேர்தல் நடக்கும். மதுரையில் பல வீடுகளில், ‘எனது ஓட்டு விற்பனைக்கல்ல‘‘ என்று எழுதி வைத்திருந்தனர். ஒரு விவசாயி தனக்கு ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட ரூ.500ஐ அரசு நிர்வாகத்திடம் வந்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, மாணவியான தனது மகள் கூறியபடி காசுவாங்கிக் கொண்டு நான் ஓட்டுபோட விரும்பவில்லை என்றார்.

நேர்மையாக நடப்பது இரவில் நிம்மதியாக தூங்குவதற்கல்ல. புகழுக்காகவோ, சொர்க்கத்துக்கு செல்வதற்காகவோ அல்ல. தவறிழைப்பவர்களை நிம்மதியாக தூங்க விடக்கூடாது என்பதற்காகத்தான். தேசத்தை நேசிப்பதன் அடையாளம்தான் நேர்மை.வேலை வாய்ப்பின்மையால் இளைஞன் விரக்தியில் இருக்கிறான். அதை போக்கியாக வேண்டும். கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு கரூர் மாவட்ட விவசாயி, பேட்டைவாய்த்தலை பஸ் நிலையத்தில் மயக்கமடைந்து கிடந்தார். அவர் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கிறார்.வாழையை பயிரிட்ட நிலையில் காவிரியில் நீர் வர வில்லை. வாழை கருகியதால் வாழ வழியில்லை. எனவே அந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டான். இந்தியாவில் 2000-05ம் ஆண்டுகளில் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

எனது தலைவன் நேர்மையாக, ஊழலற்றவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது நமது அடிப்படை உரிமை. நேர்மையின்மைக்கு இணையான பொறுப்பின்மையும் ஊழலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. பொறுப்பின்மையால் பலவற்றை தேசம் இழந்திருக்கிறது.நேர்மையாக தேர்தல் நடை பெறுவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அதுதான் இந்த தேசத்துக்கு நீங்கள் காட்டும் நன்றி. இந்த தேர்தலை நேர்மையாக நடப்படதற்கு இந்த முறை மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் அப்துல் கனி, சுப்பிரமணியம், வசந்திதேவி, கல்லூரி முதல்வர் நிர்மலா, தலைவர் மைக் முரளிதரன் ஆகியோரும் பேசினர்.