October 2, 2022

ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படும் அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு ஏன், தத்தமது துறைகளில் சாதனையாளர்களாக திகழ்பவர்களில் பலர் ஆரம்ப கால முயற்சிகளில் நிராகரிப்பை சந்தித்து மீண்டு வந்தவர்கள் தான். நிராகரிக்கப்படுவது சகஜமானது என்பதை மீறி, வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அல்லது புதிய திட்டங்களை சமர்பிக்கும் போது, நிராகரிப்பை எதிர்கொள்வது வலி மிகுந்த அனுபவமாகவே இருக்கும். பலரும் இதனால் துவண்டு போகலாம். தங்கள் திறமை மீதே சந்தேகம் கொள்ளும் அளவுக்கு நிலை குலைந்தும் போகலாம்.

ஆனால், நிராகரிப்புகளால் மனம் தளர்ந்து போய்விடக்கூடாது என்று ஊக்கம் அளிக்கிறது ’ரிஜெக்டட்.அஸ்’ (https://rejected.us/) இணையதளம். ’நாம் எல்லோருமே நிராகரிப்பை எதிர்கொண்டிருக்கிறோம்” எனும் வாசகத்தை கொண்டுள்ள இந்த தளம், இதை புதியவர்களுக்கு புரிய வைக்கும் வகையில், தொழில்நுட்ப துறை வல்லுனர்களின் ஆரம்ப கால நிராகரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வைத்துள்ளது.

உதாரணத்திற்கு கோடிங் புலிகளுன் வேடந்தாங்கலாக கருதப்படும் கித்ஹப் (GitHub) தளத்தின் இணை நிறுவனர் கிறிஸ் வன்ஸ்த்ராத் (Chris Wanstrath ), ’கித்ஹப்பை நிறுவதற்கு முன், யாஹுவில் நான் பொறியியல் பணிக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை. மற்றவர்கள் உங்களை ஊக்கமிழக்கச்செய்ய அனுமதிக்காதீர்கள்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான ஸ்டிரைப்பில் பணியாற்றும் அலெக்ஸ் செக்ஸ்டன், 3 ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் நிறுவன தொலைபேசி நேர்காணலை கூட தன்னால் கடக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஜெல்லி கிங் என்பவர், டிவிட்டரில் அருமையான வேலை கிடைப்பதற்கு முன், யூடியூப் மற்றும் பிண்டிரெஸ்ட்டில் தான் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எரிக் ரோஸன்பர்க் என்பவர், டிராப்பாகிசில் நேர்காணலே செய்யாமல் நிராகரித்தனர். மைக்ரோசாப்டில் பாதி நேர்காணலில் அனுப்பிவிட்டனர். இப்போது டிவிட்டரில் இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படி பலரும் தங்கள் ஆரம்ப கால நிராகரிப்பு அனுபவங்களையும் தற்போதைய நிலையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நிராகரிப்பால் நொந்து போகிறவர்கள், இதுவும் கடந்து போகும் என ஊக்கம் அளிக்கும் இணையதளம் இது.

பி.கு: ஆனே (Anne-Gaelle Colom ) எனும் பெண்மணி, பிரான்சில் மேலதிகாரி தனக்கான சிபாரிசை அளிக்க மறுத்ததாகவும், வேலையில் ஆண் சகாக்கள் உதவி செய்ததாக அவர் சந்தேகித்ததே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். பாரபட்சமான பார்வைகளும், பாலினம் சார்ந்த தவறான கண்ணோட்டங்களும் கூட நிராகரிப்புக்கு காரணமாக அமையலாம் என்பதை இது உணத்துகிறது.

டிவிட்டரில் வரும் வேலைவாய்ப்பு

நேர்காணல்களில் நிராகரிக்கப்பட்டாலும் மனம் தளரக்கூடாது என ஊக்கம் அளிக்கும் இணையதளத்தை பார்த்து விட்டோம். இனி, அடுத்ததாக வேலைவாய்ப்புக்கு வழி காட்டும் புதுமையான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்.

https://dowfh.io/ எனும் அந்த தளம் நம் காலத்திற்கான வேலைவாய்ப்புகளை தொகுத்தளிக்கிறது. அதாவது, ரிமோட் ஜாப்ஸ் எனப்படும், தொலைதூர அல்லது இருந்த இடத்தில் இருந்தே பணி புரியும் வேலை வாய்ப்புகளை பட்டியலிடுகிறது.

இந்த வகை வேலைகள் இப்போது ஒர்க் பிரம் ஹோம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. கொரோனா கால நெருக்கடி, நம்மில் பலருக்கும், வீட்டில் இருந்தே பணிபுரியும் அனுபவத்தை பரிட்சியமாக்கியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு முன்னரே அமைக்கப்பட்ட இந்த தளம், தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கும் தொலைதூர வேலை வாய்ப்புகளை ஒரே இடத்தில் கண்டறிய வழி செய்கிறது. அடிப்படையில், டிவிட்டரில் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் தொலைதூர வேலைவாய்ப்பு தகவல்களை எல்லாம் திரட்டி அளிக்கிறது இந்த தளம்.

தொலைதூர வேலைவாய்ப்பை நாடுபவர்கள் அவற்றை இணையத்தில் தேடி அலையாமல் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பலவேறு பிரிவுகளில் வேலை வாய்ப்பு பட்டியலிடப்படுவதோடு, நமக்கு தேவையான வேலை வாய்ப்பை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. முகப்பு பக்கத்தில் தற்போதைய வேலைவாய்ப்பு குறும்பதிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. தொலைதூர வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளத்தில் உள்ள குறும்பதிவை கிளிக் செய்து அப்படியே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அந்த இணைப்பை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். தேவை எனில், இமெயிலை பதிவு செய்து கொண்டு, செய்தி மடல் சேவை வடிவிலும் வேலைவாய்ப்பு தகவலை பெறலாம்.

சைபர்சிம்மன்