March 28, 2023

ராம் சேது – விமர்சனம்!

கூகுளில் ராமர் பாலம் என்று டைப்பிட்டுப் பாருங்கள்..எண்ணிலடங்காத ரிப்போர்ட்டர்கள் முளைக்கும்.. கொஞ்சம் விளக்கமாக சொல்வதனால் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்குள் மூழ்கியிருக்கிறது ராமர் பாலம். ராமாயணத்தில் ராமருக்காக தன் வானர படைகளை கொண்டு இந்த பாலத்தை அனுமன் அமைத்ததாக கூறப்படுகிறது. இதை இந்துக்கள் நம்புகின்றனர், புனிதமாக கருதுகிறார்கள். ஆனால் இதை வேறுசிலர் அது கடலுக்குள் இருக்கும் ஒரு மணல்திட்டு தொடர் என்று கூறுகின்றனர். இந்த விஷயம் குறித்து கூகுளில் வந்த எல்லா சேதிகளையும் ஒன்றாகக் கோர்த்து லாஜிக் மற்றும் திரைமொழிக்குத் தேவையான மேஜிக் எதுவுமில்லாமல் வழங்கி சொதப்பி இருப்பதுதான் ராம் சேது படம்.

அதாவது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆரியன் கடவுள் இல்லை என்று நம்புவர். ஆனாலும் 2001ல் தாலிபன்களால் பாமியான் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டதை சரிசெய்யும் தொல்லியலாளர் குழுவில் இடம்பெற்று உண்மையாக நடந்துக் கொண்டவராம்.. அப்பேர்படவரை நம்பி ராமர் பாலத்தை உடைத்து கடலில் கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடுகிறது ஒரு தனியார் கப்பல் நிறுவனம். அதற்கு அரசும் ஒப்புதல் அளிக்கிறது. இதனிடையேதான் ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று போராட்டம் நடப்பதுடன் பாலத்தை இடிக்க தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதை ஒட்டி ராமர் பாலம் இயற்கையாக. உருவான கல் மண் படிமம் என்று கப்பல் கம்பெனி சார்பில் கோர்ட்டில் வாதம் வைக்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் சில அதிகாரிகள் தரும் பிரஷர் காரணமாக ஆர்யன், ராமர் பாலம் தானாக உருவான ஒரு படிமம்” என அறிக்கை தருகிறார். அதை கோர்ட் ஏற்க மறுக்கிறது. இதனால் உறுதியான ஆதாரம் தேடி கடலுக்குள் மூழ்கி ராமர் பாலத்துக்கே சென்று ஆராய்ச்சி யில் ஈடுபடுகிறார். ஆனால் அதில் ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராமர் கட்டியதுதான் என்று ஆரியன் உறுதி செய்கிறார். அவரது ஆதாரத்தை கோர்ட்டு ஏற்று ராமர் பாலத்தை இடிக்க தடை விதிப்பதாக ஸ்டோரியை எக்ஸ்போஸ் செய்து இருக்கிறார்கள்.