September 27, 2021

ராகுல் வசிப்பிட சான்று கேட்ட விண்ணப்பமே போலி: காங்கிரஸ் தகவல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் போட்டியிடும் அவர், இருப்பிட சான்று கேட்டு அமேதி கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். ஆனால் அவருக்கு இருப்பிட சான்று அளிக்க கலெக்டர் மறுத்துவிட்டார்.“ராகுல்காந்திக்கு அமேதியில் எந்த குடியிருப்பும் இல்லை. அவர் அமேதியில் வசிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எதிர்பாராதவிதமாக கூட அவர் அமேதியில் தங்கி இருக்கவில்லை. எனவே அவருக்கு இருப்பிட சான்று வழங்க எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறி விண்ணப்பத்தை கலெக்டர் தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியானது.
rahul_gandhi_
ஆனால், ராகுல் காந்தி பெயரில் கொடுத்த விண்ணப்பம் போலியானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதுபோன்ற விண்ணப்பத்தை ராகுல் அனுப்பவில்லை என்றும், அது அவரது கவனத்திற்கு வராமல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ராகுல் காந்தியின் அமேதி பிரதிநிதி சந்திரகாந்த் துபே தெரிவித்தார்.அமேதியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளதாக கூறிய துபே, அவர்களின் செயல்களுக்கெல்லாம் ராகுல் காந்தி பொறுப்பாக முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ராகுல் காந்திக்கு இருப்பிடச் சான்றுக்கு விண்ணப்பித்திருந்த ராஜேந்திர சிங், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக தனி வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரத்தை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி தனி வங்கி கணக்கு தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.