September 25, 2021

ரஜினி மனைவி மீது போலீஸில் கம்ப்ளையண்ட்

“கோச்சடையான்‘ திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்து விட்டதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
latha rajni
அந்த புகார் மனுவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்“ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை, அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இந்த உரிமத்துக்கு உரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன். ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் “கோச்சடையான்“ படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதை மீறி, வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

குறிப்பாக, விற்பனை தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மீறி முரளி மனோகர் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றார். எனவே, நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்டஈட்டு தொகையை கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்த தொகையை தருவதாக உறுதி அளித்தனர். நான், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால், படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்கு பின்னரும், அவர்கள் எனக்கு தரவேண்டிய ரூ.10.2 கோடியை கொடுக்கவில்லை.

நான், எனது பணத்தை பலமுறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ் இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் கோச்சடையான், இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. (Ad Bureau Advertising Private Limited Rayala Towers 781 Mount Road chennai-600002). ஆனால், ஆட் பீரோ வாக்குறுதியின் படி 30 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தவறிவிட்டது.

ஆட் பீரோ 10 கோடி மட்டுமே கொடுத்தது, இதனால் படம் மே 9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது. மீடியா ஒன் 10 கோடி ரூபாயில் 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலையில், மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது. ஆட் பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது, மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் லதா ரஜினிகாந்தையும் அவமானப்படுத்தியது.இந்த பணப் பரிவர்த்தனையில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போதும் தலையிடவில்லை.

ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அது ஆட்பீரோ புகார் அளித்துள்ள பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தபடுத்தக் காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும். -இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.