September 18, 2021

யானைகள் படும் பாடு! – தொடரும் சர்ச்சை!

யானைகள் காட்டில் 18 மணிநேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். ஆனால் தற்போது பல்வேறு கோயில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்க விடாமல் வளர்க்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்று கோரி ஹைகோர்ட்டில் வழக்கெல்லம் நடந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலத் தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
edit aug 17
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் துன்புறுத்தவும் படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோயிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. அவைகளை 10 கிமீ தூரம் வரை கூட நடக்க வைப்பதில்லை. பெரும்பாலும் கோயில் திருவிழாவில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள அலங்கார பொருட்களை யானை மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப்படுத்துகின்றனர்.இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. எனவே கோயில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோயில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக் கூடாது என்று பொது நல வழக்கு ஒன்றின் விசாரணை இன்றும் நடந்து வருகிறது.

இதனிடையே லிஸ் ஜோன்ஸ் என்ற நிருபர் சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வருகை தந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கேரளாவுக்கு வந்தவர், புகழ்பெற்ற ஒரு கோவிலில் முன்னங்காலும் பின்னங்காலும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் யானை ஒன்று நகரக் கூட முடியாமல் சிரமப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பாகன்களின் கையில் கூர்மையான முனை கொண்ட அங்குசத்தால் யானைகள் கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து மனம் நொந்த இவர் Save The Asian Elephants (STAE) என்ற லண்டன் வழிக்கறிஞர் உதவியால் நடத்தப்படும் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றினார்.

இது தொடர்பாக, பேராசிரியர் மற்றும் ஒரு யானைப்பாகனுடன் பேசியபோது அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. இவர் முதலில் பார்த்த யானை 20 வருடங்களாக அந்த ஒரே இடத்தில் கட்டப்பட்டிருப்பதையும், அதற்கு அருகில் உள்ள மற்றொரு யானை 35 வருடங்களாக கோவிலிலேயே இருப்பதையும் அறிந்து கொண்ட அவர், இதற்கான காரணம் சுற்றுலாப் பயணிகள்தான் என்பதைக் கண்டுகொண்டார். யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தால், திருவிழாக் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 5 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் அளவிற்கு இது ஒரு தொழிலாக மாறியிருக்கிறது.

இதேபோல மொத்தம் 57 யானைகள் அந்த கோவிலில் உள்ளன. ஆசியாவின் காடுகளில் பொறி வைத்து பிடிக்கப்படும் இந்த ஆசிய யானைகள், பாகனின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அதை சிறிய கூண்டுக்குள் அடைத்து முகாம் ஒன்றில் கடுமையாக வதைக்கப்படுகிறது. இதன் மூலமாக யானையின் மனதிற்குள் கடுமையான பயத்தை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவை கோவில் நிர்வாகங்களால் வாங்கிச் செல்லப்படுகின்றன.

இதேபோல் கர்நாடகாவில் உள்ள ஒரு யானைகள் வதை முகாமிற்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து இவர் சமீபத்தில் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரை சர்வதேச அளவில் தற்போது ஒரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.