October 16, 2021

யானைகள் முகாம் – இன்று நிறைவடைவு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்!

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் பகுதியில் டிசம்பர் 19-ஆம் தேதி இரு இடங்களில் யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கப்பட்டு 48 நாட்கள் நடைபெற்ற நல வாழ்வு முகாம்களிலிருந்து 34 கோயில் யானைகளும், 18 சரணாலய யானைகளும் இன்று (பிப்.4) பிரியா விடை பெற்றுச் செல்கின்றன.
elephants camp 1
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லிமலை அடிவாரத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராம பகுதி பவானி ஆற்றங்கரையில், தமிழக கோயில் யானைகளுக்காக இந்த புத்துணர்வு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானை ஆண்டாள், ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி, திருவண்ணாமலை வட்டம் போளூர் படவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் யானை லட்சுமி, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி உள்பட 31 கோயில் யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனைமலை டாப்சிலிப் முகாமில் இருந்து கல்பனா, அபிநயா என்ற 2 பெண் யானைகள் 3 ஆண் யானைகள், முதுமலை தெப்பக்காடு முகாம் யானைகள் உள்ளிட்ட 18 வனத்துறை யானைகள் வந்தன.

இந்த முகாமில் யானைகளுக்கு காலை, மாலை என இரண்டு வேளை நடைப் பயிற்சியும், இரண்டு மணி நேரம் பவானி ஆற்றில் ஆனந்தக் குளியலும் வழங்கப்பட்டன. பின்னர் முறையான மருத்துவப் பரிசோதனைக்குப்பின் யானைகளின் எடைக்கேற்ப ஊட்டச்சத்து உணவும், தொடர்ந்து பசுந்தீவனங்களும் வழங்கப்பட்டன.முகாமில் பங்கேற்ற யானைகள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தாலும், ஒரே இடத்தில் தங்கியிருந்ததால், ஒன்றுக்கொன்று பாசத்துடன் நட்பு பாராட்டி பழகி வந்தன.

தேக்கம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கோயில் யானைகள் முகாமில், தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் யானைகளைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த முகாமை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்ததாக முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (பிப்.4) மாலை 4 மணிக்கு நடைபெறும்

இந்நிலையில் எப்போதும் யானைகளுடன் இருப்பவர்கள் யானைப் பாகன்கள். அவர்கள் அனைவரின் சார்பாக யானைகள் பற்றி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் யானை ஆண்டாளின் பாகன் திரு சிவஸ்ரீதரன் அளித்த பேட்டி:

கேள்வி : யானைகளுக்குப் புத்துணர்வு ஊட்ட என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?

பதில் : காலையில் ஐந்து ரவுண்டு நடைப்பயிற்சி. மாலையில் ஐந்து ரவுண்டு நடைப்பயிற்சி. எங்கள் ஊரில் சமதளம். இங்கு மேடு, பள்ளம். எனவே நம்மைப்போலவே யானைகளுக்கும் மூச்சு வாங்குகிறது.

கேள்வி : நாள்தோறும் யானைகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன?

பதில் : மஞ்சள் பொடி 50 கிராம், வேகவைத்த அரிசிச்சோறு 15 கிலோ, வேக வைத்த கொள்ளு ஒரு கிலோ, உப்பு 100 கிராம், வைட்டமின் மாத்திரை 50 கிராம், மினரல் மிக்சர் 50 கிராம், கரும்பு இரண்டு, வாழைப்பழம் 2 சீப், வெல்லம்- கருப்பட்டி 2 உருண்டை, செவனப்பிரகாஷ் லேகியம் 500 கிராம் ஆகியன ஒவ்வொரு யானைக்கும் நாள்தோறும் வழங்குகிறோம்.

கேள்வி : இந்த முகாம் மொத்தம் எத்தனை நாட்கள்?

பதில் : இந்த முகாம் மொத்தம் 48 நாட்கள். எனினும் போக வர மூன்று நாட்களையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 51 நாட்கள் ஆகின்றன.

கேள்வி: இங்கே காட்டு யானைகள், பிற விலங்குகள் தொந்தரவு உள்ளதா?

பதில் : ஆம். காட்டு யானைகள் தொல்லை இங்கே அதிகம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 7.30&-லிருந்து இரவு 8 மணிவரை காட்டு யானைகள் வந்தன. குன்றக்குடி, திருச்செந்தூர், காளையார் கோயில் யானைகளின் தோள்களில் உரசிச் சென்றன. ஆபத்து, ஆபத்து என்று பாகன்கள் ஒலி எழுப்ப அவை ஓடி விட்டன. கோவில் யானைகள், காட்டு யானைகளைக் கண்டு பயந்து கத்தின.மேலும் காட்டெருமைகளும் மூன்று வந்தன. மான்கள் நிறைய வந்தன. நாய்களின் தொந்தரவும் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் வனத்துறையினரும் வந்து காட்டு யானைகளை விரட்ட உதவுகின்றனர்.

கேள்வி : யானைக்கு ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது?

பதில் : ஒரு நாளைக்கு 200 லிட்டரிலிருந்து 500 லிட்டர் வரை தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

கேள்வி : யானைகளின் தூக்கம் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில் : யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரம் தூங்குகின்றன. இரவு 8.30 முதல் காலை வரை உறங்குகின்றன. சில யானைகள் இட மாற்றத்தால் சரியாகத் தூங்குவதில்லை. பொதுவாக யானைகள் நின்று கொண்டே தூங்கும் தன்மை உடையவை. காதுகளை ஆட்டாமல், அசைக்காமல் இருந்தால் தூங்குகின்றன என்று பொருள்.

கேள்வி : யானைகளுக்கிடையேயான பாச உணர்வு பற்றி உங்கள் அனுபவத்திலிருந்து சொல்ல முடியுமா?

பதில் : யானைகளுக்கிடையே பாச உணர்வு மிக அதிகம். அருகிலிருக்கும் யானைகளிடம் காட்டுகிற பாசத்தை வெறும் சொற்களால் சொல்ல முடியாது. முகாமை விட்டுப் பிரிந்து சென்ற பிறகுதான் அருகிலிருந்த யானை எங்கே என்று ஏங்கும், வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும். எங்களோடு ஒத்துழைக்காது. முரண்டு பிடிக்கும். நாட்கள் செல்லச் செல்ல அன்றாட நிகழ்வுகளுக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்.

கேள்வி: தந்தமுள்ள யானை, தந்தமில்லாத யானை பற்றி…?

பதில் : இங்கு இரண்டு ஆண் யானைகள்தான் உள்ளன. அவற்றிற்குத் தந்தங்கள் உள்ளன.

கேள்வி : கோயிலில் யானைகளை என்னென்ன பணிகளுக்காகப் பயன்படுத்துகிறீர்கள்?

பதில் : கோயிலில் அதிகாலை 5 மணிக்குத் திருமஞ்சனம் எடுத்து வருதல், சாமி புறப்பாட்டிற்கு முன் செல்லுதல், சாமரம் வீசுதல், மவுத் ஆர்கன் வாசித்தல் ஆகிய பணிகளை எல்லா யானைகளும் தத்தம் கோயில்களில் சிரத்தையோடு செய்கின்றன.

கேள்வி : யானைகளுக்கு மஸ்த் ஏற்படுவது பற்றிச் சொல்ல முடியுமா?

பதில் : யானைகளுக்கு மதம் பிடிப்பதைத்தான் மஸ்த் என்று சொல்லப்படுகிறது. அப்படி மதம் பிடித்தால் மூன்று மாதம் வரை மதம் பிடித்த யானையைக் கட்டிப் போடுவோம். முன்பை விட, அந்தக் காலங்களில் யானைகளுக்கு அதிக உணவு அளிக்கப்படும். கொள்ளு மட்டும் குறைவாகக் கொடுப்பதுண்டு.

கேள்வி : யானைகளுக்குள் ஏற்படும் காதல் உணர்வு பற்றி…?

பதில் : யானைகளுக்குப் பாச உணர்வு எப்படியோ, அதே மாதிரிதான் காதல் உணர்வு என்பதும் நிறையவே உண்டு.
elephants camp 2
கேள்வி : யானைகளைக் குளிப்பாட்ட ஏதாவது சிறப்புப் பொருள்கள் பயன்படுத்துகிறீர்களா?

பதில் : பிரஷ் மட்டும் பயன்படுத்துகிறோம். வேறு பொடியோ, சோப்போ பயன்படுத்துவதில்லை. நீண்ட நேரக்குளியல் யானைகளுக்குச் சுகமளிக்கக்கூடிய ஒன்று.

கேள்வி : யானைகளுக்கு எவ்வாறான மொழியில் பேசிப் புரிய வைக்கிறீர்கள்?

பதில் : தமிழ், மலையாளம், உருது மொழிகளில் பேசிப் புரிய வைப்போம். தமிழில் எழுந்திரு, உட்காரு என்று சொன்னால் அப்படியே புரிந்து கொண்டு செயல்படும். மலையாளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இரி அவட என்றால் உட்கார் என்பதாகப் புரிந்து கொள்ளும். எனிகே என்றால் எழுந்து கொள்ளும். உருது மொழியில் சல்ரே என்றால் நடக்கும். பைபோ என்றால் உட்காரு, படு என்று சொல்வதாகப் புரிந்து கொள்ளும். லேபோ என்றால் எழுந்திரு என்று பொருள். பொதுவாகப் பாகன்கள் தமிழ், மலையாளம், உருது மொழிகளில் எதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்றாற்போல் யானைகள் அந்த மொழியில் சொல்கிற சொற்களைப் புரிந்து கொண்டு செயல்படும்.

கேள்வி : யானைகளின் கர்ப்ப காலங்களில் எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்?

பதில் : பொதுவாகக் கோயில் யானைகள் கர்ப்பமடைய அனுமதிப்பதில்லை. ஜோடி யானைகள் பல இருந்தும் இந்த நிலைதான். யானைப் பாகன்களின் பேச்சை மீறி அசம்பாவிதம் நடப்பதற்கு யானைகளின் உல்லாசம் தடுக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி : யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இடம் திருப்தியளிக்கிறதா?

பதில் : மிகத் திருப்தியாக உள்ளது. போக்குவரத்திற்கும் மிக வசதியாக உள்ளது.காலை, மாலை குளியல், நல்ல உணவு என யானைகள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதைப் பார்த்தால் அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
முகாம் நிறைவு பெற்றுத் தத்தம் கோயில்களுக்குத் திரும்பிச் செல்லும் போது பாசப்பிணைப்பினால் அவை கண்ணீர் சிந்தியது நமக்கும் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்ச்சியாகும். மீண்டும் அவை அடுத்த ஆண்டு சந்தித்துத் தங்கள் நட்பைப் பரிமாறிக் கொள்ளும்.